Tuesday, 29 March 2016

சவ அறை

என் அறையின் முகத்தில் சவவாசணை

- - - - - - -

நீங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
ஒரு தற்கொலையின் கயிற்றில்
ஒரு பிணம் வாய்திறக்கிறது

அது,
என் ஆதிநாவின் இறுதிமொழியை
அறைசுவர்களில் முகங்களில் பூசுகிறது

என் வாழ்நாள் சூன்யத்தை
ஒரு கடிதத்தில் நிறப்புவதுதான்
தற்கொலையின் சுவையென நினைக்கிறேன்

எல்லா ரகசியங்களையும்
ஒரு காகிதத்தில் தெரிந்துகொள்ள இருக்கிற நீங்கள்
ஆழ்மன வீரியம் மிக்கவர்தான்

மனம் வலித்து அழுகிற
கடைசியத் துளியின் இருப்பு
தற்கொலையாகத்தான் இருக்கிறது
ஒருபோதும் வாழ்வின் நீதியை
இந்தக்கயிறு ஏற்றுக்கொள்ளாது

அநீதிகளின் கசப்புத்தன்மையில்
ஒரு விஷமிடர் கலந்திருப்பது
மரணத்தை சுவைக்கத்தான்

யாமம் அச்சுறுத்துகிற
இந்தப்பேய்யிரவின் பம்மிய வெளிச்சத்தில்
என் ஆன்மா அலைந்து திரிவதை
நீங்கள் காணக்கூடும்

அது
உணர்த்துகிற பயத்தின் உச்சம்
உங்கள் உயிர் பற்றிய
இருதயத்துடிப்பு தான்

கழிவறையின் நூலாம்படையில் தொங்கிக்கொண்டிருக்கிற
எட்டுக்கால் பூச்சியின் வயிற்றுப்பகுதியில்
என் ஆன்மா மறைந்தே வாழும்

கொஞ்சம் பொறுத்திருங்கள்

இலைகள் சருகாகும் காலத்திற்குள்
ஒரு கட்டில் உதைக்கப்படும்
கதவுகள் உடைக்கப்படும்

- அதிரூபன்

Tuesday, 22 March 2016

காட்டுத்தோழியின் பார்வையில்

காட்டுத்தோழியின் பார்வையில்

- - - - - - - - - -

மௌனம் புதைத்து எழுந்த
அடர்வனத்தின் வாசம் நீ
ஒரு மழையின் தெரிப்பில் பேசந்தொடங்குகிறாய்

எனக்குள்ளான உன்வரவை
காட்டில் தொலைந்துபோனவளின் பாதை என்கிறாய்

நீ அறியாத ஒரு வாசத்திற்கு
என்பெயர் வைத்திருப்பதாய் சொல்கிறாய்

ஒரு முயல்குட்டியின் முள்ளங்கிச்சுவைபோல் தான்
என் பேச்சின் வாசமும் என்கிற உன்னால்,
பொருள் தெரியாத பொய் அறிந்து மகிழ்கிறேன்

எனக்காக ஒரு இலையை பத்தரபடுத்தியிருக்கிற
உன் புத்தகங்களுக்கு மத்தியில்
உறங்கிப்போவதாய் உணர்கிறேன்

ஒரு நதியின் ஓட்டத்தில்
ஒன்றிக்கொண்டிருக்கிறது இருவரின் பிம்பம்,
நாம் இணைந்த நீரில்
பல முள்ளில்லாத மீன்குஞ்சுகள்
நீந்திப்போவதன் ரகசியத்தை
என் செவிமடலுக்கருகில் கிசுகிசுக்கிறாய்

இந்த மீன்குஞ்சுகளின் குரல்வளைக்குள்
நம் பாத அழுக்குகள் ஒன்றுசேர்வது
என் ஆசைக்குள் நீ மூழ்கிவிட்டதாய் எண்ணுகிறேன்

மரக்குகையொன்றில்
கிளி மறைத்துவைத்திருந்த
கொய்யாப்பிஞ்சினை
எனக்காக திருடி வந்து நீட்டுகிறாய்

என் காட்டுவழிகளில்
உன் பாதவடிவத்தில்
புலியொன்று திரிகிறது என்கிற உன்பேச்சை,
நம்பித்தான் ஆகவேண்டும்

இந்தப் பெருங்காட்டை
ஒரு விதைக்குள் திணித்து
மென்று கொண்டிருக்கிறேன்,
உன்னை மட்டுமே சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
என்கிற உன் வனக்குரலைத்தான்,
நான் காதலிக்க விரும்புகிறேன் ..

- அதிரூபன்.

Sunday, 20 March 2016

இருள்நிறதாகம்

இருள் நிற தாகம்

- - - - - - - - -

நிலவின் குளிரில் மேய்ந்துகொண்டிருக்கிற விலங்குகள்,
மோகப்பசியின் உடல்சூட்டிற்குள்
தன்னை பொருத்த நினைக்கின்றன

நிறமற்ற பூக்களின் மகர்ந்தத்திற்குள்
பூச்சி வடிவிலொரு காமம் இறங்கி,
தன் பிறப்புநாக்கிலிருந்து பெருங்கதை பேச
காம்புகள் பெருத்து நிறைமாதமாகின்றன பூக்கள்

பச்சையத்தின் வேர்களுக்கு
காதலிக்க சொல்லித்தருகிற ஆகாயத்தின் நீர்த்துளி,
பெரும் மின்னல் வெளிச்சத்தில்
முத்தமிட நாநீட்டுகிறது

வெய்யில்பாறையின்
இலைஇல்லாத பிறந்த செடிகளின் ரோமங்கள்,
சூரியனை மென்று உடலரும்புகிற ரகசியம்
நான் மட்டும் அறிவேன்

உடல் திறந்து பார்த்து
நிறைந்திருக்கிற காற்றின் உயிரில்
இருள்நிறக் காமம் கலந்திருப்பதன் அவசியம்,
எனக்கும் உனக்கும் சம்பந்தப்பட்டது..

- அதிரூபன்

Tuesday, 8 March 2016

காட்டின்மொழி பேசுகிற நாவு

காட்டின்மொழி பேசுகிற நாவு

- - -  - - - - - -

மௌனம் ஊரிப்போன அனாந்திரக்காடு, ஆளரமில்லாத வெளி, உயிர்களின் வாசம் சங்கீதத்தை பேசும் சத்தம், மாகணம் வாய்க்கப்பெற்ற ஒற்றையாய் நான்.

தூர சத்தத்திலிருந்து ஒரு துயரம் அழுவதை என் செவிகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
யாருடைய அழுகை அல்லது யாருடைய பசி அது..?

புலப்படாத தூரத்திலிருந்து புலப்படாத சத்தம் கசிவது ஒருவித அச்சம் கலந்த ரசணைதான்.!
சத்தத்தை செவிகளின் விழி நுகர்கிறது.
பறவைக்குஞ்சுகளின் முதல் அழுகையாக தெரிகிறது,முதல் பசியாகவும் தெரிகிற பிஞ்சுக்குரல்.

இந்த சத்தத்திலிருந்துதான் வனம் என்னுடன் பேசத்தொடங்கியது. அந்தக்குரல் தேடி அகம் அலையும் திசைகளில் தாவரநெருக்கங்கள்.

யானையின் முகம் அளவிற்கு பெரிதாய் இருக்கிற அந்த இலையின் பெயர் அறிந்துகொள்ள மனம் ஆசைப்படுகிறது.
நானும் இலையிடம் பேசிப்பார்த்தேன், ஒரு சிறுகாற்று அசைவில் தலைஆட்டிவிட்டு, தன் முகத்தில் மஞ்சள்வெயிலை வாங்கிக்கொண்டு நிறமாற்றமடைகிறது.

இந்த ஒளிஒலிக்காடு அதற்கான ரகசியத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதது தான், அதன் அழகென பார்க்கிறேன்.

மலையொன்றிலிருந்து ஒருபெரியமழை அருவியாய் பேசிவிழும் சத்தம் காதுமடலை குளிர்விக்கிறது.

வனமெங்கிலும் பேசுகிற சத்தம்தான்.மனிதபார்வைக்கு புலப்படாத மனிதறிவிற்கு எட்டாத மனிதன் தவிர்த்த உயிர்களின் சத்தம்.

பிற உயிராக இருந்துபார்ப்பதென்பது எல்லைகளில்லா ரசனை நிறைந்த அனுபவம்.! எறும்பின் குரலை யாரேனும் அறிந்திருப்பாரோ.!?
அதன் குரலின் மீச்சிறு அளவை நான் இதுவரை அறிந்ததில்லை.

என் எதிரே ஒரு முயல் இருகுட்டிகளை பிரசவித்து, மயக்கத்தில் இன்னும் கண்திறக்காது கிடக்கிறது. அதன் பிரசவவாடை என்னை தீண்டிவிட்டு கொஞ்சமாய் காடு கலக்கிறது.

குட்டிமுயலொன்றை தொட்டுப்பார்கிறேன்.அதன் பாதமொன்றை விரித்துப்பார்கிறேன். நான்கு முகங்கள் அதன் பாதத்தில். சின்னசின்னதாய் நீண்டகாதுகள். தூக்க நினைக்கும் நேரத்தில் முயல் கண்விழித்துக்கொண்டது.
அவர்களின் மகிழ்வை பார்த்துக்கொண்டே தடமில்லா வெளியில் பயணிக்கிறேன்.

மழை பெய்து ஓய்ந்த வனத்தின் ஒரு பகுதி, தற்கணம் நான் நின்றுகொண்டிருப்பது. ஈரவெளி,ஈர இலை, ஈரத்தடங்கள் எல்லாம் குளிரின் ஆடை போர்த்திக்கிடக்கிறது.

மழைக்குருவியொன்று தன் இனத்தோடு ஒரு நெரிசல் மரத்தின் மடியில் நடுங்கிக்கொண்டிருக்கிறது. பெயர்தெரியாத நிறத்தில் மஞ்சாங்குட்டிகளின் நடுக்கம், ஒரு விரிந்த வனத்திற்குள் தனித்துதெரிகிறது.

இதுவல்லவா பூரணம்..!

இதில் ஏதாவது ஒரு குருவியின் சிறகுகளில் இருந்து விழும் இறகுகளை பத்தரபடுத்த ஆசை மேலோங்குகிறது. நியாயமான ஆசைதான்.எந்த நிறங்களின் இறகுகளும் மரித்துப்போகவில்லையே.

வனக்காதுகளில் என் தடங்களின் சத்தம் விழுந்தநேரத்தில் சிலநிமிடம் அமைதியாய் இருந்தது காடு.
இந்த மௌனத்திலிருந்து ஒரு மிருகத்தின் சத்தம் என் தைரியத்தை குழைக்கிறது. ஒரு பெருங்காடு இந்த பயங்கரத்தால் பழகியிருப்பது எனக்கு புதிதுதான்.

கால்களில் நீர் ஊறுகிறது. நிர்ப்பது சதுப்புநிலக்காடொன்றின் பகுதியில். மனதின் மையத்தை நனைக்கிறது இந்த நிலத்தின் குளிர்ச்சி.
இங்குள்ள மரங்களின் வேர்கள் மண்ணுக்கு மேலே நீண்டுகிடக்கிறது. தலைவிறிக்கோலமாய் வாழ்கிற மரங்கள் என் பார்வையில் புதிதுபுதிதாய் தெரிகிறது.என் செவிகளுக்குப்புரிகிற பாசையில் பேசுகிறது.

இங்குதான், நிலத்தின் வாசம் நாசியில் நிறைந்துகிடப்பதாய் உணர்கிறேன். வாசம் உணர்கிற அறிவில் நான் மனிதவாசம் அற்றவனாய் போனேன்.

உயிர்களோடு ஒன்றி வாழ்வது எத்தனை எத்தனை சுகமானது. எண்ணிலடங்கா ஞானத்தை இந்த வெளியிலிந்து கற்றுக்கொள்ளலாம்.

நான் இவ்வாறு வாழ்கிற வாழ்வு என் அகவெளி சம்பந்தப்பட்டதே. என் இந்த வாழ்வு ஒரு காடொன்றை வரைகிறது. அதன் எல்ல திசைகளிலும் உயிர்களின் மனமணம்.

நாம் பேசுவதை நாம் கேட்கிற வாய்ப்பு இந்த நிலத்திற்கு மட்டுமே உரியது.

வாழ்வு என் நாட்களை இவ்வாறு எழுதியிருக்கிறது. காடொன்றில் தொலைந்துபோக மனம் வேண்டுகிறது.

காட்டின் மொழி அறிந்த கணத்திலிருந்து என் கவிதைகளை வனத்தின் காதுகளுக்குள் இறக்க ப்ரயாசைப்படுகிறேன்.

என் வாழ்வு என்னோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை.

வனம் வாழ்தலானது...!

- அதிரூபன்

Saturday, 5 March 2016

இரவல் தேடி

இரவல் கேட்டு செவி நீட்டுகிறது இரவு

அடர்மௌனத்திலிருந்து
ஒரு பறவையின் சிறகசைவு சிதறுகிற தெரிப்பு
இந்த வானத்தின் எல்லா திசையிலும் தான்

திசை தேடிச் சிறகுவிரிக்கும்
ஆக்காட்டியின் இலந்தைப்பழக் கண்களில்
ஒரு கருப்புவனம்
வானில் சத்தமிட்டுக்கொண்டே பறக்கிறது

நிர்வாணமரத்தின்
கிளைமுறிந்த கொம்பில்,
இரு மூக்குநீண்ட பறவையினப் பறவைகள்
மரத்தின் ஆடையை அணிந்து
இரவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காதல் செய்கின்றனர்

கூண்டுப்பறவையொன்று
பாடத்தொடங்கியது,
அதன் குரலின் அழுகையில்
ஒரு வானம் வருந்திக்கொண்டிருப்பதாக
இந்த இரவு எனக்கு மொழிபெயர்க்கிறது

இப்போதுதான் சிறகுமுளைத்த மகிழ்ச்சியில்
பறக்கத்தொடங்கிய ஒருபிஞ்சுஇளம் குழந்தை,
வலையின் வானத்தில் மாட்டிக்கொண்டதன் ரகசியம்
என் செவிகளை ஊமை ஆக்கியது

தூங்கிக்கொண்டிருக்கிற
குழந்தையின் கைவிரல்கள்,
கனவில் பட்டாம்பூச்சியை தொட நீளுகிறது.
இந்தச்சுகம் மட்டுமே
பறத்தலுக்கான சிறைபிடியை
ரசிக்க கற்றுத்தருகிறது ..

- அதிரூபன்

தேகவெடிப்பு

தேகவெடிப்பு

- - - - - - - - - -

கூதல் காலத்துக் கனவுகளில்
முத்தம் தேடித்திரியும் யாமத்தின்இரவுகள்
பாலைதேசத்தின் வெம்மைகுடித்துச் சாவும்,
வெய்யோன் கடித்து வளர்கிற கள்ளியின் மொட்டுகள்
சூரியனின் உதடுகளை நியாபகப்படுத்துகின்றன,
பனிஈரம் படரும் கிளைப்பூக்களின் உயிரை
பட்டாம்பூச்சிகள் உறிஞ்சி நாசிநிறைப்பது
அதிகாலையின் ஆகச்சிறந்தக்காதல்,
ஆவாரம்பூவின் மஞ்சள்நாவுகள்
கூந்தலின் தேகத்தில் வாசம்காண்பது
பகல்நேரத்தின் பிஞ்சுக்காமம்,
கதிர்கள் உதித்து பிறை மறையும் பொழுதெங்கிலும்
முத்தத்தின் வாடை பிரபஞ்சத்தை இறுக்குகிறது.,
குமரியொருத்தியின் பறித்தலுக்காக மட்டுமே
பூத்துக்கொண்டிருக்கின்றன என் தொட்டில்செடியின் காமம் ..

- அதிரூபன்

ஆதிவாசியாகிறவனின் பகல்

ஆதியநாட்களின் நிறம்

- - - - - - - - - -

வர்ணப்பூச்சித் தேடி அலையும் காட்டின்வழி முழுவதும்
பூ பறித்துச்சென்றவளின் பாதங்கள்,
தடத்தின் இருப்பை பார்வை தீண்டும் மதியப்பொழுதில்
சலங்கை கட்டிய நடனமெனத் தாவுகிறது முயல்குட்டி,
நிலா தெரிகிறச் சாயங்கால வனத்திற்குள்
நட்சத்திரத்தின் பெயர்சொல்லி விழுகிறது சருகுகள்,
காட்டுத்தோழியின் பார்வையில் சுருங்குகிறது
விரல்தொட அஞ்சுகிற தொட்டாச்சிணுங்கியின் தேகம்,
இப்போதுதான் சிறகடிக்க தொடங்கியிருக்கிறது
என் பெயர்சொல்லி பாடுகிற இரவுப்பறவை,
ஹார்மோனியத்தின் வாசனை
சருகுநொறுங்கும் ஒவ்வொரு கணத்திலும் தெரிக்கிறது,
காடொன்றை வரைந்து கொண்டிருக்கிற ப்ரஸ்ஸின் சாயத்தில்
ஒரு இலை அழுதுகொண்டுவிழுகுறது,

நான், ஆதியாகி பழைய நாட்களை மேய்ந்துகொண்டிருந்த சாமக்கனவில்,
ஒரு காடு தன்நிழல்மேல் நிறம்காட்டிச்செல்கிறது.

- அதிரூபன்.