Tuesday 8 March 2016

காட்டின்மொழி பேசுகிற நாவு

காட்டின்மொழி பேசுகிற நாவு

- - -  - - - - - -

மௌனம் ஊரிப்போன அனாந்திரக்காடு, ஆளரமில்லாத வெளி, உயிர்களின் வாசம் சங்கீதத்தை பேசும் சத்தம், மாகணம் வாய்க்கப்பெற்ற ஒற்றையாய் நான்.

தூர சத்தத்திலிருந்து ஒரு துயரம் அழுவதை என் செவிகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
யாருடைய அழுகை அல்லது யாருடைய பசி அது..?

புலப்படாத தூரத்திலிருந்து புலப்படாத சத்தம் கசிவது ஒருவித அச்சம் கலந்த ரசணைதான்.!
சத்தத்தை செவிகளின் விழி நுகர்கிறது.
பறவைக்குஞ்சுகளின் முதல் அழுகையாக தெரிகிறது,முதல் பசியாகவும் தெரிகிற பிஞ்சுக்குரல்.

இந்த சத்தத்திலிருந்துதான் வனம் என்னுடன் பேசத்தொடங்கியது. அந்தக்குரல் தேடி அகம் அலையும் திசைகளில் தாவரநெருக்கங்கள்.

யானையின் முகம் அளவிற்கு பெரிதாய் இருக்கிற அந்த இலையின் பெயர் அறிந்துகொள்ள மனம் ஆசைப்படுகிறது.
நானும் இலையிடம் பேசிப்பார்த்தேன், ஒரு சிறுகாற்று அசைவில் தலைஆட்டிவிட்டு, தன் முகத்தில் மஞ்சள்வெயிலை வாங்கிக்கொண்டு நிறமாற்றமடைகிறது.

இந்த ஒளிஒலிக்காடு அதற்கான ரகசியத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதது தான், அதன் அழகென பார்க்கிறேன்.

மலையொன்றிலிருந்து ஒருபெரியமழை அருவியாய் பேசிவிழும் சத்தம் காதுமடலை குளிர்விக்கிறது.

வனமெங்கிலும் பேசுகிற சத்தம்தான்.மனிதபார்வைக்கு புலப்படாத மனிதறிவிற்கு எட்டாத மனிதன் தவிர்த்த உயிர்களின் சத்தம்.

பிற உயிராக இருந்துபார்ப்பதென்பது எல்லைகளில்லா ரசனை நிறைந்த அனுபவம்.! எறும்பின் குரலை யாரேனும் அறிந்திருப்பாரோ.!?
அதன் குரலின் மீச்சிறு அளவை நான் இதுவரை அறிந்ததில்லை.

என் எதிரே ஒரு முயல் இருகுட்டிகளை பிரசவித்து, மயக்கத்தில் இன்னும் கண்திறக்காது கிடக்கிறது. அதன் பிரசவவாடை என்னை தீண்டிவிட்டு கொஞ்சமாய் காடு கலக்கிறது.

குட்டிமுயலொன்றை தொட்டுப்பார்கிறேன்.அதன் பாதமொன்றை விரித்துப்பார்கிறேன். நான்கு முகங்கள் அதன் பாதத்தில். சின்னசின்னதாய் நீண்டகாதுகள். தூக்க நினைக்கும் நேரத்தில் முயல் கண்விழித்துக்கொண்டது.
அவர்களின் மகிழ்வை பார்த்துக்கொண்டே தடமில்லா வெளியில் பயணிக்கிறேன்.

மழை பெய்து ஓய்ந்த வனத்தின் ஒரு பகுதி, தற்கணம் நான் நின்றுகொண்டிருப்பது. ஈரவெளி,ஈர இலை, ஈரத்தடங்கள் எல்லாம் குளிரின் ஆடை போர்த்திக்கிடக்கிறது.

மழைக்குருவியொன்று தன் இனத்தோடு ஒரு நெரிசல் மரத்தின் மடியில் நடுங்கிக்கொண்டிருக்கிறது. பெயர்தெரியாத நிறத்தில் மஞ்சாங்குட்டிகளின் நடுக்கம், ஒரு விரிந்த வனத்திற்குள் தனித்துதெரிகிறது.

இதுவல்லவா பூரணம்..!

இதில் ஏதாவது ஒரு குருவியின் சிறகுகளில் இருந்து விழும் இறகுகளை பத்தரபடுத்த ஆசை மேலோங்குகிறது. நியாயமான ஆசைதான்.எந்த நிறங்களின் இறகுகளும் மரித்துப்போகவில்லையே.

வனக்காதுகளில் என் தடங்களின் சத்தம் விழுந்தநேரத்தில் சிலநிமிடம் அமைதியாய் இருந்தது காடு.
இந்த மௌனத்திலிருந்து ஒரு மிருகத்தின் சத்தம் என் தைரியத்தை குழைக்கிறது. ஒரு பெருங்காடு இந்த பயங்கரத்தால் பழகியிருப்பது எனக்கு புதிதுதான்.

கால்களில் நீர் ஊறுகிறது. நிர்ப்பது சதுப்புநிலக்காடொன்றின் பகுதியில். மனதின் மையத்தை நனைக்கிறது இந்த நிலத்தின் குளிர்ச்சி.
இங்குள்ள மரங்களின் வேர்கள் மண்ணுக்கு மேலே நீண்டுகிடக்கிறது. தலைவிறிக்கோலமாய் வாழ்கிற மரங்கள் என் பார்வையில் புதிதுபுதிதாய் தெரிகிறது.என் செவிகளுக்குப்புரிகிற பாசையில் பேசுகிறது.

இங்குதான், நிலத்தின் வாசம் நாசியில் நிறைந்துகிடப்பதாய் உணர்கிறேன். வாசம் உணர்கிற அறிவில் நான் மனிதவாசம் அற்றவனாய் போனேன்.

உயிர்களோடு ஒன்றி வாழ்வது எத்தனை எத்தனை சுகமானது. எண்ணிலடங்கா ஞானத்தை இந்த வெளியிலிந்து கற்றுக்கொள்ளலாம்.

நான் இவ்வாறு வாழ்கிற வாழ்வு என் அகவெளி சம்பந்தப்பட்டதே. என் இந்த வாழ்வு ஒரு காடொன்றை வரைகிறது. அதன் எல்ல திசைகளிலும் உயிர்களின் மனமணம்.

நாம் பேசுவதை நாம் கேட்கிற வாய்ப்பு இந்த நிலத்திற்கு மட்டுமே உரியது.

வாழ்வு என் நாட்களை இவ்வாறு எழுதியிருக்கிறது. காடொன்றில் தொலைந்துபோக மனம் வேண்டுகிறது.

காட்டின் மொழி அறிந்த கணத்திலிருந்து என் கவிதைகளை வனத்தின் காதுகளுக்குள் இறக்க ப்ரயாசைப்படுகிறேன்.

என் வாழ்வு என்னோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை.

வனம் வாழ்தலானது...!

- அதிரூபன்

No comments:

Post a Comment