Saturday 30 April 2016

நிழல் உதிக்கும் மலர்கள்

நிழல் உதிக்கும் மலர்கள்

- - - - - - -

தீவு நிலத்தில்
காணப்பெறாத மலரொன்றை
என் உள்ளங்கையின் ரேகைகளுக்குள் விளைவித்து,
நீ துயிலிழந்த படுக்கையறையில் பத்தரபடுத்துகிறேன்

மருதாணிக்காடொன்றில் தொலைந்துபோன ஜீவன்
என் உடலை விழித்திருக்கச் செய்கிறது
உன் படுக்கையறை மலரின் வாசம்
என் விழிகளில் வழிதேடுகிறது

நித்திரை அற்றுப்போன நம் விழிகள்
இருளின் பெரியமூங்கில் கூட்டொன்றில்
கனவுகளை ஈனுகின்றன
பிரசவித்த கனவுகளின் உடலில்
தீவுமலர்களின் வாசம்

மேகங்களின் காதுக்கருகில் நிலா உறங்குகிறது
அது உறங்கி உறைகிற இருளில்
மலர்கள் திசைகளை மேயத்தொடங்கின

நீர்காகமொன்றின் நிறத்தில்
ஒரு காடு விழிகளுக்குமேல் படர்வதை உணர்கிறேன்
என் இமைத்தாவரத்தில் உதிரத்தொடங்கிய பூவின்சாயல்
உன் படுக்கையறை மலரோடு கலந்திருக்கிறது

இருள் சரிகிற அதிகாலையின் வெயிலில்
தீவுநிலமலர் உன் கூந்தலுக்குள் நிழல் பரப்பும்

மீண்டுமாய் ஒருபெரும்வாசத்தில்

காட்டுக்குள் தொலைந்துபோனவனின் பாதையை
இந்தமலர் உனக்கு வழிகாட்டும் ..

- அதிரூபன்

Wednesday 20 April 2016

இருளின் ஒலிமுகங்கள்

இருளின் ஒலிமுகங்கள்

- - - - - - - -

இரவின் மேல் படரும் உணரொலிகள்
ஆழ்மனதின் காதுகளுக்குள் இறங்குகின்றன

இருளின் ஒலிமுகங்கள்,

தனிமையின் பெருத்த மௌனத்தை
புல்லாங்குழலின் விழிகளில் இருந்து
கசியவிட்டிருக்கிறது

முகமறிய ப்ரியப்படும் இருளின் கடவுள்கள்
இரவின் கவிதைகளை வாசித்துக்காட்டுகின்றனர்
மொழி உருண்டோடும் பாதைவெளிகளில்
கனவுகளின் நிசப்தங்கள்

விரல்களின் அணைப்பில் பரவும் கதகதப்பில்
மெத்தைமேல் விரியும் இருளின் ஒலிகள்
பசித்த ஆட்டுக்குட்டியின் கண்களை
முத்தமிடுகின்றன

காத்திருத்தலுக்கான தலைவியின் காதல்
மௌனத்தின் சுடரொளியை மேயத்தொடங்கியது
அவளின் திசையில் எரிகிற காட்டுத் தீ
தனிமையின் ஊடலை பெருங்காடாக்கி எரிக்கிறது

மணம் வீசுகிற பாதையின் வனத்தில்
மலர் விரிகிற நுண்சப்தம்
இரவின் காதுகளில் விழுந்தெழுகிறது,
திசையெங்கிலும் தனித்துக்கிடக்கிற ஒற்றைமுத்தங்கள்
மலரின் மகரந்தவெளிக்குள் நிறைந்து கிடக்கின்றன

அமிழ்தல் அற்றுக்கிடக்கிற ஒலிமுகங்கள்
இரவின் மழையில் சடசடக்கின்றன
ஒலிஒளியிலான இரவென்பது
ஒவ்வொரு கண பிறத்தலிலான அழுகையின் முழுமை ..

- அதிரூபன்

Friday 15 April 2016

நீரில் விழுந்த காடு

நீரில் விழுந்த காடு

- - - - - - -  - -

நிழலடர்ந்த வனநிலத்தின் மரங்கள்
வெய்யில்நேர பைக்கால் ஏரியில்
உறங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்

அலகு நீண்ட பறவையின் பசி
இந்த நீரின்மீனை கவ்விக்கொண்டிருப்பதான பிம்பம்
இந்த நீரில் துடித்திக்கொண்டிருக்கிறது

செவ்வெறும்புகளின் கூடொன்று
கொய்யாஇலையின் உடலெங்கிலும் படர,
நீரின் மேலே விழுந்த மரங்களில்
ஊறிக்கொண்டிருக்கிறன உயிர்கள்

வலுவிழந்து முறிந்த கிளையொன்றில்
ஒரு இலையின் உயிர் பிரிந்துபோக,
இன்னும் ஆதித்தோற்றத்து பிஞ்சிலைபோல் இருக்கிறது
நீரில் விழுந்த நிழலிலை

மரவிலங்கொன்று
காட்டுமரத்தின் மேலேறி உறங்க,
வயிறுப்பி இறந்துபோய் மிதக்கிற உடல்
இந்த விலங்காக இருக்கிறது

பறவையின் இறகுதிர்த்தலின் போது
சிறகுக்கூடை பிரிந்த இறகொன்று
நீரின் மேலே விழ,

ஒரு காடு குழைகிறது ..!

- அதிரூபன்

Saturday 9 April 2016

ஜிப்ரானின் காதலி

செல்மாவின் விடியல்களில்
கனவுகள் உதிரத்தொடங்கியபோது
மர ஆடையின் ஈரத்திற்குள்ளிருந்து
இமைகள் இமைக்கத்தொடங்கின

வான்பொத்தல்களில் இருந்த
மூடுபனியின் இருட்டு
விழிகளுக்குள் சுவர்க்கம் பரப்புகையில்
ஏகாந்தத்தின் மூலையில்
ஆதிக்காதல் பேசத்தொடங்கியது

செல்மாவின்
கல்லறை பூக்களின் மகரந்திற்குள்
ஜிப்ரானின் இசை நிறைந்துகிடக்கிறது

சருகுமழையின் குவியலுக்குள்ளிருந்த
இறந்தகவிதை
ஒரு மின்மினிவெளிச்சத்தில் உயிர்ப்பாகிறது

நீ எழுதிய கவிதையின் எந்தவரியிலும்
நான் உயிரோடு இல்லை

காதலன் சுவைத்த உதட்டுநிறத்தில்
காதலின் விஷம் உயிருக்குள் நூலாகி
காமத்தின் ஆடையை நெய்துகொண்டிருக்கிறது

அதிகாலை இருளில் இதழ்விரிக்கிற கொழிஞ்சிக்காட்டுக்குள்
உன் இளமையின் முத்தம் ஒன்றைத் தேடித்திரியும்

உன் முத்தங்களை வர்ணப்பூச்சிக்கு பருக்கு
அவைகள்
என் கல்லறைச்செடியின் ஆகச்சிறந்த காதல்வாசிகள்

கனவுகளுக்குள் விளைந்த இரவுகள்
உன் கம்பளியை கேட்கின்றன

சின்னதாய் கட்டிப்பிடி
உன் அருகம்புல் ரோமச் சிலிர்ப்புக்குள்
செல்மாவின் இறந்த விழிகள்
திறந்து மூடட்டும்

கொஞ்சமாய் அவைகளை காதல்செய்

- அதிரூபன்

Sunday 3 April 2016

நிராசைகளின் ஆதித்தாய் கவிதைநூல் விமர்சனம்

தூவானக்காட்டில் புல்லாங்குழல் பாடும் பறவை

- - - - - - - - -

உணர் ஊறிய கவிதைமனம் பட்டாம்பூச்சிகளின் ஆடைகளை திருடுகின்றன. அசாதரணமான கணங்களில் சாதாரண மனம் பேசுகிற கவிதைகளில் உலகின் சௌகர்யத்தின் நிறைவு மொழியின் மேலே தக்கையென மிதந்துகிடக்கிறது.

கவிதை பேசிமகிழ எழுத்துப்பூர்வமான வடிவம் அறிந்து மகிழ்கிறேன். " என் ஆன்மாவின் எளிய குரல் கவிதை " என்கிற தேன்மொழியின் காட்டுக்குள் ஒட்டுண்ணித்தாவரம் ஆகிறேன்.

இதுவரை மொழி அனுபவிக்காத வார்த்தைகள் காட்டின் மரங்களென வான் தொடுகிறது. அகவெளியின் காட்சிக்குள்ளே ஆன்மா உரைகிற பாதையை இந்த எழுத்து சமன்செய்கிறது. நம்பமறுக்கிற தேன்மொழியின் எழுத்தின்வெளிகளில் யூகலிப்டஸ் மரங்களின் காட்டுவாசணை. நீர் உலர்த்துகிற பறவைகளின் வெயில் போல இந்த கவிதைகளின் தாகம் என் இருளை பறக்கவிடுகின்றன. மிளகுநிறத்தேநீரின் வாசம் உள்மனதின் சதைகளில் கீற்றிடும் போது என் எதிர் இருக்கையில் இந்த கவிதைகள் தான்.

காட்டின் மொழி பேசிமகிழ்கிற மனநாவு தன் பாதைகளில் கவிதைகளை நடவுசெய்கின்றது. ஒவ்வொரு நடவுச்செடியிலும் விரிகிற கவிதைமலர்கள் மனித உயிர்களின் மனதாடையை நெய்துகொண்டிருக்கின்றன.

ஆழ்மனதின் ஆழம் " நான் பனிகுடத்தில் மூளை உருவாகும் காலத்தில் இருக்கிறேன் "  இந்த வரிகளுக்குள் தான் இருக்கிறது. இந்த வரியின்முகம் உணர இதுக்குள்ளே சிறைபட்டிக்கிடக்கிறது மனம்.

பைத்தியத்தின் மொழி சிறு புன்னகையில் துவங்குகிறது என்கிற தேன்மொழிக்கும் காற்றை வீழ்த்துகிற பூக்களின் வாசனையில் இருப்பேன் என்கிற தேன்மொழிக்கும் இடையில் மொழியேறமுடியாத உணர்வு இருப்பதாக உணர்கிறேன்.

காட்டுப்பாதைகளில் மான்களின் கொம்புகள், ருத்ராட்சமரத்தின் கனிந்த பழங்கள், கிராம்பு மரத்துப் பூக்களின் வாசனை, சாம்புராணி மரத்துப்பூக்கள், ஒட்டுண்ணித்தாவரத்தின் வேர்கள், முள்ளம்பன்றியின் முடியில் கிடக்கும் அழகு, ஆலி மழைபெய்யும் தூவானக்காடு , சிறுமிளகின் இருட்டு என்று இதுவரை மொழியும் மனமும் அனுபவப்படாத பாதைகளில் இவரது கவிதைகள் பயணிக்கவைப்பது தான் அலாதியகணத்தின் கொண்டாட்டமாக உணர்கிறேன்.

"மழையின் தாய் எனக்குள் உறைபனியாய் இருக்கிறாள்"
"வீட்டுக்கதவைத் தட்டிய விரல்கள் என் இளமையோடு முடிந்துவிட்டன "
இந்த எழுத்து உச்சந்தலையில் காயும் வெயிலை சிதைக்கிறது. மழைமலர்களென மனதிற்குள் ஈரவாடையாய் குளிர்கிறது

"நான் என் நாய்குட்டிகளின் கண்களுக்குள் வசிப்பதில் நிறைவுறுகிறேன்"
இதுதான் கவிதைமனது. உயிர்களுக்கான பொதுவெளியில் பயணிப்பதே நேர்மையான வாழ்வு. ஒரு கவிதை மற்றொன்றை நியாபகப்படுத்துவது கடந்த காலத்து நாட்கள்மீது படிகிறது என்று உணரும்போது கவிஞன் பேசப்படுகிறான்.
" என் கவிதைகளை வனமரங்களின் காதுக்குள் இறக்க ப்ரியப்படுகிறேன் " என்று நான் எழுதிய வரியொன்றை தேன்மொழியின் உனது ரகசியங்கள் நியாபகப்படுத்தியது. என் பழைய இரவின் மாகணத்தில் இந்த கவிதை அமர்ந்து எழுந்து பறந்துபோகிறது.

"பட்டாம்பூச்சியின் மேனியில் படிந்து வெயிலெனத் தொலைந்தது பருவம்"
"உண்ணிப்பூக்களின் கரிய கனிகளில் உருவாகிறது மொழி"
"ஒற்றை மாம்பூவாய் நெற்றியில் குறுகுகிறது உயிர்"
"மரணத்தின் இருள் மூளையின் செதில்களை உழுகிறது"
" மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியினை விட குரல்களே அதிகம் கேட்கின்றன "
- எல்லா காலத்துக்கும் கவிசமைக்கும் தேன்மொழியின் எழுதும்விரல்கள் சமகாலத்தின் வாசகமனதை அல்லது எழுத்துஉடம்பை உறைவிடமாக்கி தேங்கிநிற்கின்றன. இந்த எழுத்து நாம் யாருமே வாழாத வாழ்ந்துபார்க்க முடியாத நாட்களோட பிரதி. இந்திரன் அவர்கள் சொன்னதுதான், இவரின் கவிதைமொழி இயற்கையின் தறியில் நெசவு செய்யப்படுகிறது.

தென்றலை ஆடையாக அணிய நினைக்கிற பைத்தியக்காரி நிச்சயம் கவிதைக்காரியாகத்தான் இருப்பாள்.
" தென்றலை ஆடையாக அணிந்தபோது நிலவுக்கு சாம்பலின் அங்கம் என்று கண்டேன்" என்கிற தேன்மொழி தாஸ்ஸின் கவிமனதை பைத்தியம் என்பதிலே  மாஉண்மை பேசியதுபோல மகிழ்கிறேன். பலநேரங்களில் பைத்தியக்காரர்கள் தான் மனிதமனம் பேசாத உணராத ஒன்றை பேசுவார்கள். கவிதைகளும் அப்படித்தானே.!
சிங்கத்தின் கண்களில் நேநீரைப்போன்ற கடல் அசைவதை கண்டேன் என்கிற வேறொருமனதிற்கு பித்துப்பிடித்ததை அவ்வளவு அழகாக ரசிக்கிறேன்.
குழந்தைகள் பைத்தியக்காரர்கள் கவிதைஎழுதுபவர்கள் இவர்கள் ஒரே மரத்தில் விளைந்த பூக்களாக மணக்கின்றனர்.

'நாவுமரம்' என்கிற வார்த்தை என் உயிருக்குள் சருகுதிர்பதாய் உணர்கிறேன்.
மணலின் மீது நடக்கும் போது விழும் பள்ளம் அவனுக்கு காதல்
காற்றடிக்கும் திசை அத்தனையிலும் காதலிகள்.
இந்த வரிகள் மீது காதல் உதிக்கிறது. மனம் விரும்புகிற ஒன்றின் மடி இந்தமாதிரியான கவிதைகள் தான்.

"மழைகள்" "மழைநிலா"
என்னமாதிரியான வார்த்தைகள் இவை.! மனம் இந்த முரணடர்ந்த வார்த்தைகளை விழுங்கி வாழ்கிறது.
"பல்லாயிரம் புறாக்களின் சிறகுகள் நரம்புகளுக்குள் பயணிக்கின்றன"
சாம்புராணி மரத்துப்பூக்களை தேவதைகளின் ஆடைகளென சொன்ன அந்த மனதின் ரகசியங்களகத்தான் நான் இப்போது காதலிக்கிறேன்.
எல்லா வார்த்தைகளில் இருந்தும் புதுவெளி பிறக்கிறது. மனம் நம்பமறுக்கிற கவிதைகளின் ஆச்சர்யம் எல்லா பக்கங்களிலும்.

"உள்ளங்கையில் வெயிலை ஏந்தி
நேனீர் விழிக்குள் தேயிலைக்காடுகளை நடுகிறேன்"

மனம் ஆயிரம் குமிழிகளாய் உடைந்து பறக்கிறது. என் எல்லா திசைகளிலிம் இந்த கவிதைகளை விட்டெரிகிறேன். அவைகள் அதற்கு தேவையான உணவுகளை காட்டுமூங்கிலின் மனமுடையோரிடம் உண்று வாழட்டும்.

இன்னும் குறிப்பிடாத ஒரு கவிதை, காமத்தின் பின் தொடரல் . இது கவிதையென்பதையும் தாண்டி இவ்வாழ்வின் ஒழுங்கிற்குள் பயணிக்கிற கண்நரம்புகளாகத்தெரிகிறது. பெண், வாழ்நாளில் எல்லா திசைகளையும் மலை பாதையில் தொலைந்த தடங்களாக எண்ணச்சொல்கிறது இந்தக்கவிதை.

கவிதைகளின் மீதேறி பயணிக்க பிரபஞ்சத்தை கவிதையாக்கி காகிதமனம் படைக்க மாநுடம் உணராத புதுவெளியில் தன் பட்டாம்மூச்சிகளை பறக்கவிட எல்லாவுமாய் இருக்கிறது தேன்மொழி தாஸ்ஸின் கவிதைகள்.

படித்துணர்ந்ததில் கற்றுக்கொண்டவன் ஆனேன்.
பெரும்மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அக்கா

- அதிரூபன்