Saturday 5 March 2016

இரவல் தேடி

இரவல் கேட்டு செவி நீட்டுகிறது இரவு

அடர்மௌனத்திலிருந்து
ஒரு பறவையின் சிறகசைவு சிதறுகிற தெரிப்பு
இந்த வானத்தின் எல்லா திசையிலும் தான்

திசை தேடிச் சிறகுவிரிக்கும்
ஆக்காட்டியின் இலந்தைப்பழக் கண்களில்
ஒரு கருப்புவனம்
வானில் சத்தமிட்டுக்கொண்டே பறக்கிறது

நிர்வாணமரத்தின்
கிளைமுறிந்த கொம்பில்,
இரு மூக்குநீண்ட பறவையினப் பறவைகள்
மரத்தின் ஆடையை அணிந்து
இரவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காதல் செய்கின்றனர்

கூண்டுப்பறவையொன்று
பாடத்தொடங்கியது,
அதன் குரலின் அழுகையில்
ஒரு வானம் வருந்திக்கொண்டிருப்பதாக
இந்த இரவு எனக்கு மொழிபெயர்க்கிறது

இப்போதுதான் சிறகுமுளைத்த மகிழ்ச்சியில்
பறக்கத்தொடங்கிய ஒருபிஞ்சுஇளம் குழந்தை,
வலையின் வானத்தில் மாட்டிக்கொண்டதன் ரகசியம்
என் செவிகளை ஊமை ஆக்கியது

தூங்கிக்கொண்டிருக்கிற
குழந்தையின் கைவிரல்கள்,
கனவில் பட்டாம்பூச்சியை தொட நீளுகிறது.
இந்தச்சுகம் மட்டுமே
பறத்தலுக்கான சிறைபிடியை
ரசிக்க கற்றுத்தருகிறது ..

- அதிரூபன்

No comments:

Post a Comment