Friday, 8 July 2016

மிழினாவின் புராதனக்குடில்


மிழினாவின் புராதனக்குடில்

- - - - - - - -

காடுபேறு கொண்டவளின் மனம் திவ்யமாய் இசைத்துக்கிடக்கிறது. மனம் காணாத வெளியில் வாழ்வை நகற்றுவதில் ஆழமாய் இருக்கிறாள் மிழினா.  மரங்களும் இலைகளும் பேசும் நிஜத்தை தன் காதுகள் இரவல் வாங்கிக்கொள்ளுமென தனக்குள் ஓயாது எழுதிக்கொண்டிருக்கிறாள். தன் ரகசியங்களை வானில் பறக்கவிடுகிற பட்டாம்பூச்சி மனம் அவளுக்கானது.

காட்டில் தொலைந்துபோகிற சுகம் வாழ்நாளின் அதிஉண்ணத தருணமென எண்ணுகிறவள், ஒருநாள் கண்கள்நிறைய காட்டுக்கனவுகளோடு அடர்ந்த மரங்களின் நடுவே புதிய மனிதத் தடம் பதித்து காடு நுழைகிறாள்.

காட்டுவாசம் மனதை குளிர்விப்பதாய் உணருகிறவள், உயிர்களுக்கான பொதுவெளியில் தன் கனவுகளை திறந்து காடு பார்க்கிறாள். நிலமெங்கும் ஊறும் பச்சையத்தோலில் தன் கண்களை இறக்கி தாவரங்களின் மடியில் முகம் வைத்து வாசம் உண்கிறாள் .

மனம் உணராத பெருவெளியின் மகிழ்வுகளுக்கு உயிருள்ளதாய் எண்ணி மகிழ்கிறாள். பெருத்த மரத்தின் உடலை யானையை வருடுவதுபோலென்னி தொட்டுப்பார்த்து இக்கணத்தின் மனதை காடாக்கி மகிழ்கிறாள்.

இலைகளில் பட்டுத் தெரிக்கும் ஒளியில் முகம் நுழைத்து வண்ணமாகிறாள்.
அகத்தை கண்ணாடியாக்கி தன் ஒளிமுகத்தை நினைத்து பார்த்து தூய ஒளியில் முகம் நனைத்ததை எண்ணி ஓலமிடுகிறாள்.

மிருகங்களால் கொள்ளப்படுவோம் என்பதன் பயம் துளியும் இல்லை. இறத்தலை காட்டுக்குள் துறப்பது வாழ்வின் பூரணமென பேசுகிற மனசு அவளை பாதுகாக்கிறது.
நிலம் அதிரும் வேர்களின் வாசம் நிலத்திற்குமேலே வீசத்தொடங்குகிறது. மனிதவாசம் கழிவுற்றதாய் எண்ணுகிறாள் மிழினா.

இலையில்லாத வெளியில் தன் உடலை நகர்த்தி நடந்துபோகிய், எப்போதும் குளித்துக்கொண்டே இருக்கும் அருவி நீரள்ளி குரல் நனைக்கிறாள். உயிருக்குள் இறங்கும் சுவையை வாய்நிறைய பருகு இன்னும் யாரிடமும் பேசாத அகமொழியில் பாட்டுபாடிக்கொண்டு மலையில் பயணிக்கிறாள்.

குரங்குகளும் குருவிகளும் மனித சப்தத்தால் கலவரம் அடைகின்றன.
தன் குடிலுக்குள் நாகம் நுழைவதுபோலான பயத்தை இந்த பறவைகளுக்கு ஏற்படுத்திவிட்டதென்னி வருந்துகிறாள்.

வயிற்றின் பசியை உணர்ந்து மலைவாழை பழங்கள் உண்டு குடல் நிறைக்கிறாள்.
திசைகள் அறியாத பக்கங்களில் இருந்து புதுப்புது ஒலிகள். அனைத்தும் காட்டின் இசை. இந்தகணத்திலான இசைவெளியில் உயிர்துறப்பது வாழ்வின் பூரணமென ஒரு குரல் அவளுக்குள் பேசுகிறது.

காட்டின் அந்திப்பொழுது இரவின் முகத்தை காட்டி இருள்கிறது. இருள்முகம் காண இரவுக்குள் விழிகள் நீட்டி புலப்படாத பிம்பத்தில் அதிர்வுறுகிறாள். காட்டின் பயம் உயிர்பற்றியதல்ல என்பதில் தெளிவாய் இருக்கிறாள்.
காட்டின் வயது பேசும் ஒருமரத்தின் அடியில் உடல் சாய்த்து உறங்குகிறாள்.

காட்டுக்கனவுகளோடு காட்டுக்குள் உறங்கும் சுகம் உயிரின் இன்பம். சருகுகளை அணிந்துகொண்டு உறங்கியவளின் காடு கொஞ்சமாய் ஒளி வீசுகிறது. விடியலின் முகம் புதிதாய் இருக்கிறது. கனவுகளை உதறிக்கொண்டு கண்களை  திறந்து புதியவெளி பார்க்கிறாள்.

காலைவனம் கேட்டிராத சப்தத்திலிருந்து பிறக்கிறது. இன்று காணப்போகும் உலகம் நேற்றிலிருந்து பிறந்ததில்லை என்கிற மனதோடு புதிய ஒளியை காட்டுக்குள் வீசத்தொடங்கினாள்.

காற்று பேசும் மரங்களின் நிழலில் தன் புலன்களை உயிர்பித்து காடுதோறும் விளைந்த கனவின் ரகசியத்தை காற்றோடு பேசி நகர்கிறாள்.

வாழ்தலுக்கான அகக்காரணங்கள் காட்டில் பிறந்தவை. இங்கு வீசும் காற்றும் வாசமும் உயிரின் ஆயுள். புராதன நிலத்தில் வாழும் தற்கணம் தன் மனதுக்குள் புதிதாய் காடுபார்க்கிறாள்.

தாவரங்கள் கடிக்கப்பட்டிருக்கின்றன. பழங்களின் விதைகள் திசைகள்தோறும் சிதறிக்கிடக்கிறது. மனிதன் அல்லாத வேறுஉயிரின் தடம் தன் நிழலுக்கருகில் மறைந்து செல்வதை காண்கிறாள். தன் மிரண்ட கண்களுக்குள் நகரும் மிருகம் எதிரில் ஒரு உடலைத் கடித்துக்கொண்டு நடந்துபோகிறது. எதிரில் நகரும் பயம் இவளை ஒன்றும்செய்யவில்லை. காட்டுயிர் ஆகிவிட்டோம் என்று நினைத்து மகிழ்கிறாள்.

நெரிசல்கள் குறைந்த இடத்தில் பாறையொன்றின் மேலேறி தன் மகிழ்வினை காடு நிரப்புகிறாள். உயிர் விரும்பும் இடம் இந்தகாட்டின் எல்லா நிலிலும் இருக்கிறது.

கண்கள் விரிகிற வெளியில் தன்னை துரத்திக்கொண்டு ஓடுகிற மனதின் ஆசையில் கண்டிராத வெளியறிந்து உயிர்மகிழ அழுகிறாள் மிழினா .

மரங்களின் நடுவே தன் உயிரை தொலைக்கிற மனம் இப்போது அவள்கணம் ஆனது. காட்டை அருந்தி காட்டை விழுங்கி காட்டை மென்று காட்டுக்குள் மறிக்கிறாள் .

இப்போது அவளின் உயிர்குடித்து வளர்ந்த மரமொன்றில் பறவை கூடுகட்டுகிறது.
ஓடுகள் உடைத்து உடல் நீட்டிய குஞ்சுகளின் முகமொன்றில் மிழினாவின் முகத்தை காடுபார்க்கிறது. பழையநினைவில் ஊறிய காடு இந்தப்பிஞ்சுப் பறவையின் விழிகளில் நெழிகிறது.

பறவையின் முகம்வாங்கி மீண்டும் காடு நுழைகிறாள் மிழினா .
காடு பார்க்கிறாள் காடு சுவைக்கிறாள் காடாய் கனல்கிறாள்....

- அதிரூபன்

மழைக்காதலர்கள்

மழைக்காதலர்கள்

- - - - - - - - -

குளிரில் நடுங்கும் மர உருக்கள்
காற்றின் ரூபத்தை காதலிக்கத்தொடங்கின

அந்நாளில் ஒழுகிய வான்தூதுவர்கள்
தேவதைகளின் கரங்களில் இருந்து
ஆயுள்ரேகைகளை வாங்கிக்கொண்டு
மலைமுகடுகளில் முத்தமாய் வழிந்தோடுகின்றனர்

நிலம் பேசும் வான்துளிகளில்
மூதாதையர்களின் அழுகை

மழைத்துளியில் நனைகிற பழங்குடியின் குடில்களால்
நூற்றாண்டுகால ரகசியம் கமல்கிறது

காட்டின்மகள் நீராடுகிற தாமரைக்குளக்கரையில்
தவளைகள் இன்பமுறுகின்றன

தேவர்களின் எச்சிலால் ஒழுகிய வானம்
வனதெய்வத்தை நனைக்கிறது,
யுக ஆண்டுகளாய் இமைமூடியிருந்த கடவுள்
ஈரத்தழுவலால் ஒளி வீசுகிறார்

மழையில் மூழ்குகிற மரப்பாச்சி தேகமொன்று
காட்டுயிர்களின் காதுகளில்
காதல்சொல்லி பிரிகிறது .....

- அதிரூபன்

ஆதித்தன்மையின் குடில்

ஆதித்தன்மையின் குடில்

- - - - - - - - - - -

மறக்க நினைக்கிற கணங்களின்மீது தூரிகை வரைந்து செல்கிறான் பூபாலன். வண்ணங்கள் சிதறிய பெருவெளியிலிருந்து தனக்கான கணத்தை கவிதையாக்கி மகிழ்கிறான். ஆதிக்குறிப்புகள் மீது படிந்த புதியபார்வை தற்கணத்தின் சாயலை எழுதச்சொல்கிறது. தன் கண்ணீரை அதிஉண்ணத இசைக்கருவியென வாசித்துக்கொண்டிருக்கிறவனின் இரவு தான் பூபாலனின் கவிதை. தான் பயணிக்கிற வெளியிலிருந்து கணம்ஊறி மனம் தேக்கிவைத்த ஆசைகளின் மீதும், புலன்விரும்புகிற காட்சிகளில் மீட்கமுடியாத ரகசியத்தின் மீதுமே தன் தனிமையை செலவழிக்கிறான்.

பிரபஞ்சத்தின் முகத்தை யூகிக்கநினைக்கிறவனின் மனம், இப்போது அழிந்த சாம்பல்கின்னத்தில் நிறைந்துகிடக்கிறது. உலகத்திற்கே ஒருமுகம் அது ஆதிமுகம். இந்தமுகத்தின் பிரதிகள் தான் அன்புசெழுத்துபவையும் எறித்து புதைப்பவையும்.

தன்நிலையை கவிதையாக்குகிற போதும் பிறவலியை மையப்படுத்தும்போதும் தன் ஆதிமுகத்தின் மீது படர்ந்திருந்த பெருங்காலத்தை தடவிப்பார்க்கிறான் பூபாலன்.

சிநேகிக்கிற மனம் இவனுக்குள் எப்பொழுதுமாய் இருக்கிறது. உடைந்து சிதறிய சோப்புகுமிழ்களால் புன்னகையைத் தொலைத்தேன் என சொல்லும்போது இவன் மனம் நமக்கு புலப்படுகிறது. மனதின் தேடலுக்குள் நிறைந்திருக்கிற அகப்பார்வை இவனை கவிதை எழுதவைத்திருக்கிறது. உயிர் பேசநினைக்கிற புதிதில் தன் குழந்தைமுகத்தை நிறுத்தியிருக்கிறான். இவனால் ஆன பிரபஞ்சம் குழந்தைகளால் ஆனது. இவன் கவிதைகளில் திரியும் குழந்தைகள் வானவில்லானவை. அவைகளின் காதுகளில் பிங்க் நிறத்தின் ரகசியம் சொல்லி மறைகிறவனின் தடங்கள் தான் பூபாலனின் கவிதை.

கவிதைகளுக்குள் அலைகிற வண்ணங்கள் ப்ரத்யேகமானவை. அவைகள் பிறக்கிற தருணங்களில் தூரிகைசூட்டில் நனையவிரும்புகிற மனம்தான் வாசக எண்ணம்.

அமுங்கிய அடிவயிற்றை அவள் தடவிக் கொண்டிருக்கும் நேரம்....... இந்தவரி எதனால் ஆனது. மனம் பேச மறுக்கிறது. உயிர் உறைந்த இடத்திலிருந்து தேடுகிறேன். ஆழ்மனவீரியமிக்க ஜீவிகள் சிகரைட் சாம்பலில் கரைக்க நினைக்கிற தருணமென சொல்கிறான் பூபாலன்.

காலகாலமாய் பெண்களுக்கு நடந்துவரும் இழிச்செயல்கள். எழுதிப் பயன்படாத பக்கத்தில் அழுகையை மட்டுமே நிரப்பமுடிகிறது. மனிதமிருகங்களின் தடங்கள் காமம் பிடித்தவை. எதிர்பாலினத்தை பறிக்க நினைக்கிற மனிதச்செயல், இழிந்தவினைக்குள் நுழையச்சொல்லுகிற மனிதமனம் எவ்வளவு கலவரமானது..

"" உயிரும் உடலும் சேர்ந்து வழங்கியும்
உயிரை வெறுத்து உடலை விரும்புகிற ஆண்களின் இழிந்த வினை " ( க.வை. பழனிச்சாமியின் மீண்டும் ஆதியாகி நாவலின் ஒரு வரி இது )
- எவ்வளவு உண்மை நிறைந்தது இது.

உரக்க பேசுகிற என்போன்ற குரல்களால் பிரபஞ்சத்தின் காதுகள் செவிடாகின்றது.
மனிதமொழி பேசுகிற நாக்கைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன், எனக்குள்ளும் என்வெளியிலும்.

பூபாலின் கவிதைகள் குழந்தைகளுக்கான முகம் கடவுளுக்கான அகம் மிருகங்களுக்கான அகம்புறம் நிறைந்தவை. கவிதைக்குள் தொலைந்துவிடுகிற சௌகர்யம் எனக்கு பிடித்தவையே அண்ணா....

- அதிரூபன்.

ஆதிமுகத்தின் காலப்பிரதி
ஆசிரியர் இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கியவட்டம் வெளியீடு
விலை.70