Friday, 30 October 2015

எழுத்து உதிர்த்த ஒன்று கவிதையாக

யாவும் பிரம்மாண்டத்தை தழுவியபடி
அகத்தின் தூய சாயலில்
ஒரு பரந்த வானத்தைப்போல்
விரிந்துகிடக்கிறது

இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தில்
ஒருவனுக்கான ஜீவிதத்தை
அவன் பிரியப்படுகிற கலையில்
அவனாக்கிக்கொள்கிற ஒன்றை
மாபெரும் எண்ணத்தின் முழுமையால்
மண்டியிட்டுக்கிடக்கிறான்.
இந்த கிடத்தல்
நயப்படுகிற அகத்தின் பேரானந்தத்தை
கொண்டாடும் கணமாக
கலையின் கிளைகளில்
கவிதையென ஓவியமென இசையென சிற்பமென
புலன்விரும்புகிற ஒன்றின் மடியில்
ஊசலாடி மகிழத்தான்.

எழுத்து தருகிற நம்வளர்வை
வேறேதேனும் ஒன்றோடு இணையாக்கமுடியாதென்று
கற்றுக்கொண்ட மனதின்பிடியில்
கவிதையை அமர்த்தி
அதன் உயிரின் மேலேறி
சருகிசருகி விளையாட அல்லது
அது உதிர்த்த இறகுகளை கலைக்க,
கவிதையின் உடம்பை ஏந்திக்கொண்டு
நித்தம் என்னோடு அதை பயணப்படுத்த,
முளைத்தக் கைகளின் விரல்களில்
அதை அடிமைப்படுத்தி ஆனந்தமடைய,
புலனாதிக்கத்தின் பெயர்சொல்லி
கவிதையின் மடிபிடித்து மார்பருகி வாழ,
எனக்குள்ளான என்னோடு இருக்கிற கலைக்கு
உயிர்கொடுத்து அதன் ஜீவிதத்தை உணர
கற்பனைசெய்யப்பட்ட பிரமாண்ட பிரபஞ்சத்தோடே
என்னை வளர்த்துவருகிறேன்.

என்னைச்சார்ந்த உலகம்
என்னை ஏந்தியிருக்கிற பூமியின் மடி
என்னை வாழவிடுகிற பூமியின் வெளி
இவற்றோடு ஒன்றி
கவிதையின் மகத்துவத்தை
சந்தித்த ஆளுமைகளின் முன்நிறுத்தி
என்னை நானே தட்டிக்கொடுத்து,
மாமனித எழுத்துக்களின் பூரண ஆசிவாங்கி
அவற்களின் அகத்தில் திசுவாகினும் நுழைய
வேண்டித்தவிக்கிறது இந்நித்திய ஜீவன்.

இப்பிரபஞ்சம் விரித்த
கலைமடியில்
ஆறாமறிவு உதிர்த்த கவிதையொன்றிற்கு
உயிரையும் உடலையும் தேடி
இனி மறைபொருளாவேன் ..

- ச.விவேக்

Saturday, 17 October 2015

முருக பூபதியின் " மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி "

@ மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி @

கோமாளிகளின் வாசத்தை பூமி காற்றோடு பறத்தவிட்டிருக்கிறது.
கோமாளி என்பவர்களின் மறுபக்கமெனும் அகத்தில்
பிரபஞ்சம் புரிந்திடநினையாத ஒரு மாபெரும் பிரம்மாண்டத்தை ஒழித்துவைத்துள்ளது.
சகக்கோமாளிகள் உறிஞ்சும் காற்றைத்தான்
முகமூடிஇல்லாத நம்உரு உண்டுகொண்டிருக்கிறது .
கோமாளிகளின் சாமாணிய பூமியொன்றில்தான்
இனி இந்த பாமரவிரும்பியும் ..

செம்புழுதி பறந்து எரியும்
இந்த நாடகநிலத்தில்தான்
கோமாளிகளின் வியர்வைத்துளிகள்
கலையையுண்ற மகிழ்வில் மரணிக்கின்றன.
சாயங்களால் கோரத்தாண்டவமாடும் கோமாளிகளின் அப்பாவி முகத்தினுள்
ஒரு குழந்தையும் தெய்வமும் மறைந்தே அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
கலையெனும் நரம்பு புடைத்து
சதைவீங்கி எழுந்த உடல்மயிர்களின் உச்சமே
கலைநயத்திற்கு கிரீடமனிந்து நிமிர்ந்த கோடியுயிர்களின் வளர்ச்சி.
கண்ணாடியின் மிருதுவினுள்
தவக்காதலியான கொறத்தியின் கூசும்புன்னகையை
தேடித்திரியும் ஒரு நாடோடிக்கோமாளியின் இயல்பை
பிரபஞ்சந்தில் எந்த உயிரும் இதுவரை தேடியதில்லை.
தன் ஜென்மத்திற்கான ஒருத்தியை
மயானத்தில் வினவித்திரியும் கோமாளியின் கண்களுள்
வீரியம் வழிந்தோடிகிறது.
ஓலைக்கூடைகளுக்கு கைகால் முளைத்து
புழுதிபடிந்து பறந்துவழிந்த
அவலத்தின் நீண்டச்சாயலொன்றை
பம்மியவெளிச்சத்தின் தெளிந்தகாட்சியாய் தரிசிக்கும்போது
கண்களுக்கான சிரிப்புவொன்றை
உணரமுடிகிறது.
இசையின் முடிச்சொன்றில் பிண்ணிய
இறந்தவளின் மெல்லிய ஓலத்தை
காதுகள் காணநேர்கிறகணம்
ஒரு மாயையொன்றின் உருவை
உருவகித்து தரிசிக்கிறது.
கோரஅவலத்தின் நீண்டகாட்சியங்கள்
தீண்டித்திரியும் உயிரின்உயிரை
ஒரு கோமாளியின் முகம் அப்பட்டமாக்குகின்றன.
உயிரும் உணர்வும் இல்லாத
பொம்மைகளின் உடம்பை சூடும்மாயாவிகள்
கோமாளிகளின் வியர்வையில் முளைத்த உயிராகவே தெரிகிறார்கள்.
ஆஷா என்கிற கோமாளியின் ஒப்பாரியில்
ஒரு உயிருள்ள மானுடக்காதல் வேண்டித்திரியும் பூரணத்தை
ஓலத்தோடு திரியும் கதறலின் அழுகைமொழியை
பொம்மைகளும் கோமாளிகளும் நாமும்
உணருகின்ற ஒருபெருவலியில்
பிரபஞ்சத்தின் அடியில் நான் அழுதுகொண்டிருந்தேன் என்பதே நிஜம்.

ஒரு கலைக்கான மகத்துவத்தை
உள்ளுணர்வை வெளிக்கொணரும் திறனை
வலியின்வலியை உணர்த்துகிற கலைநோக்கத்தை
தலைவணங்குகிற எனுக்குள்ளான என்அகத்திற்கு
பூரணமகிழ்வையும் நிறைந்த கொண்டாட்டத்தையும் வழங்கிய
முருகபூபதி மற்றுமான கோமாளிகளுக்கு
என் கரைபடியாத முத்தங்கள் .

இனி,
என்னுள்ளான ஒரு கோமாளியைத்தேடி ..

- அதிரூபன்  .

Saturday, 10 October 2015

அந்தரங்கம்

சிநேகம் மொய்த்து
என்னுடல் மேல்
படரத்துடிக்கும் ஜீவன்,
ஒரு ஹலோ சொல்லி
கை குழுக்குகிறது

அதி சுகந்த ப்ரணயத்தின் உடலில்
மைக்ரோ அளவிளான காமம்
ஆடைக்குமேலேயான ப்யூட்டியில்
சிதறிக்கிடக்கிறது

தேகவெளியின் இருக்கையில்
ஒரு ஜான் அளவிளான இடைவெளியில்
நீளக் கைக்குட்டையும்
ஒரு லேடீஸ் செப்பல்ஸ்ம் .

பேசும் காற்றொன்று
மூச்சுக்குழல் வழி இறங்கி
நேருக்கு நேர்
அந்தரங்கமாய் மாயையாயி
மூச்சுவாங்குகிறது

மழையின் சாரலில் குளித்த
குடைவிரித்தலுக்கு முந்தைய உடல்மாதிரி
நாணச்சுகத்தின் பொழிவில்
துளிதுளியாய் ஆகிறது தேகமேகம்

வெட்கத்தின் நரம்பெல்லாம் மூச்சிழைக்க
உயிரொன்று கேட்கிறது
பொத்தல்கள் நிறைந்த ஆடையை

மௌனத்தின் கிரீடமனிந்த
ஒரு இரவைப்போல்தான் இருக்கிறது
இருவரின் திறந்த முகமும்

கொஞ்சம் இரவைப் போர்த்தி வாழ்கிறது
என் போர்வையும்
உன் ஆடையும் ...

- ச.விவேக்.

Friday, 2 October 2015

சகான்மா

பிரபஞ்சம் அதன் இறகுகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறது
வர்ணபூச்சியொன்றிற்கு காதுக்குள் கிச்சுகிச்சு மீட்டும் சுகத்தை
ஒரு குழந்தையின் கைவிரல் பூரணமாக்கி பூரணமாக்கி ரசிக்கிறது
ரட்சிக்கப்பட்ட ஒருத்தி
சாலையில் இறந்துகிடக்கிற ஒரு வர்ணபூச்சிக்குக்கு
உயிர்கொடுக்கிறாள்
இப்போதெல்லாம் ஆதவன்
குளிர்மையையே லோகம் பூசுகுறான்
கொலைகாரனின் கைவிரல்தான்
எறும்புக்கு தீணி போடுகிறது
ஒரு யாசகப்பார்வையின் எதிர்பார்ப்பில்
நாம் அடிமையாகும் சினேகம்
முளைத்துவருகிறது
இங்கெல்லாம் உறைந்துபோகிற நம் அகப்பிளவுகளில்
ஒரு கவிதை ஜீவிதம்ஆவதை
எதைகொண்டு நிறுத்த சகான்மாவே .....?!

Thursday, 1 October 2015

கவிதைகளுக்கான வெளி

- அகத்தேடல் ஒரு மாபெரும் பிரபஞ்சம் -

-----------------------

கவிதை எழுதக் காத்திருக்கிற மனம்
ஒரு பிரம்மாண்டத்தின் உச்சியில்
தலைகீழாய் தொங்குகிற ஏதோவொன்றின் உயிரை
கைவசப்படுத்துகிறது

உயிர் ஒழுகி ஓடுகிற வெளியில்
ஒரு மானுடப்புன்னகையை நிறுத்தி
ஆன்மாவின் உருவிற்கு
சிரிக்க கற்றுத்தருகிறது

வனக்காட்டின் இசைஓலங்களில்
அதன் பிரியராகத்தைத் தடவி
சரிந்த சருகுகளின் மேலேறி
தனக்குப்பிடித்தமான கீதத்தை
புல்லாங்குழல்வெளி உரித்தெடுக்கிறது

யாசகமனத்தின் தூய்மையை
அதிகொஞ்சமாய் குளிர்விக்க
வியர்வைத்துளியில் நனைந்த நாணயத்தை
பேரன்போடு பரிசளிக்கிறது

மழலையின் நகத்தின்அளவாவது
ஒரு கவிதைக்கான செரிவு நிறைந்திருக்க
யுக தூயசாட்சிகளின் நிறைவோடு
ஆசிர்வதிக்கிறது

லோகம் பெய்யும் மழையில்
ஒரு காகிதத்தையும் பேனாவையும்
தன் விரும்பிய பக்கத்தில் மறைத்துவைத்து
பாதுகாக்கிறது

துளி ஜலம் கொணரும் குளிர்மையை
ஒரு இரவில் போர்வையில் போர்த்தி
அதனுள்ளே குவிந்த மாறுபட்ட உணர்வை
ஜென்ம பூரணமாக்க விரும்புகிறது

ஒரு எறும்பின் பெரிய பற்களுக்கிடையே
ஒட்டியிருக்கிற சிறுசதைவலியில்
ஒரு குழந்தையின் அழுகையை
அலறலாக்கி பூசியிருக்கிறது

அகத்தூய்மையின் உணர்தலை
ஒரு கவிதையாக்கி மகிழத்தான்
இச்ஞென்மத்தின் வெளியை
ஒரு காகிதமாக்க பிராத்திக்கிறது ..

- ச.விவேக்.