Sunday 3 January 2016

அகாலத்தின் ஓசை

அகாலத்தின் மொழி
என்னுள் பேசப்படுகிறது

ஒரு ரோபோவின் குரலை
ரசித்துக்கொண்டிருக்கிற காதுகளில்,
என் ஜென்மத்திற்கான குரல்
புல்லாங்குழலில் இருந்து கசிந்து விழுகிறது

நம்பமறுக்கிற கனவொன்றில்
நீரின் மேலே நடந்துசெல்கிற
பைத்தியக்காரனாக தெரிகிறவனின் நிழலை
அலைகள் அப்படியே வைத்திருக்கிறது,
தற்சமயம் மிதந்துகொண்டிருக்கிறது அவனின் அரூபநிழல்.

வனத்தின் நடுவில்
சருகுகுலைத்த ஒரு வைலட்நிற மெத்தையில்
நிர்வாணத்தின் உடையை உடுத்தியிருக்கிற
மிருகங்கள் புணராத ஒரு கற்பை,
ஒரு பகல்காற்று புணர
வனத்தினுள்ளே ஒருபெரும் மழை
தரையிலிருந்து மேலே துயில்கிறது.

நத்தையின் கொம்புகள் இரண்டு
திசைகளை உசுப்பி உசுப்பி
ஈரத்தடங்களில் முத்தமிடுகிற நிகழ்வு,
வானவில்லுக்கு முத்தத்தை பறக்கவிடுகிற குழந்தையை
நியாபகப்படுத்துகிறது.

நிலாக்கள் உடைய தேசத்தை
ஒரு குழந்தையின் பென்சில்
வரையத்தொடங்கிய பௌர்ணமியில்,
கிணற்றொன்றில் முட்டை வடிவில் மிதப்பது
யாதென்னு தெரியாது போகிறது யாவருக்கும்.

பூனையின் கண்களில்
கண்மை தடவுகிற பெண்ணிற்கு
உதடுகளை நீட்டுகிறது
ஒருசுட்டிக்குட்டி தூங்குமூஞ்சி.

- அதிரூபன்

No comments:

Post a Comment