Monday 4 January 2016

குஞ்சிறகுகள்

குஞ்சு ஜீவ ஸ்மைலிகள்

- - - - - - - - - - - - -

காலை ஒளியின் கதிர்கள்
நடனமாடுகிற வெள்ளைநிறப் பொழுதில்
அதிப் ப்ரயாசப்படுகிற துளியின் குளிர்மை
அனிச்சையுணர்த்தி புல்  கண்விரிக்க
ஒரு வானம் அந்நாந்து பார்க்கிற கனவு
எனக்குள் ஊடுறுவுகிறது

எலிக்குஞ்சுகளின் முட்டைகளில்
செடி முளைக்கிற ஒரு தேசத்தில்
என் கனவு பிறந்திருக்க,
ஈரத்தலையை
ஒரு கார்கால இரவில் உதறிக்கொண்டிருக்கிற மனுஷியை
அக்கணம் நான் புணர்ந்திருப்பதாக
ஒரு பழையநினைவு வந்துசெல்கிறது

மஞ்சள் நிற அந்திச்சாயலிலொரு பொழுதில்
என் குளத்தின் தவளைகள் எழுப்புகிற புணரொலியிலிருந்து
ஒரு கூச்சம் குளநீரில் நனைந்து
கரையேறுகிற ஒரு தவளையின் நிழலில்
ஒரு குட்டி பிறந்திருக்கிறதாக வந்தக்கனவில்
நான் என் கண்களை விட்டு வெளியே விழுந்துகிடந்தேன்

வெண்ணை ஒழுகுகிற பானையிலிருந்து
ஒரு பசுவின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதாய்
நம்பப்படுகற கனவிற்கு அருகில்,
இறந்துகிடக்கிறவளின் மார்புகளை
சப்பிக்கொண்டிருக்கிற குழந்தையின் பசி
ஆதரவற்று கிடக்கிறது

எறும்பின் தடங்களில்
வந்து அமர்கிற ஒரு ஈரக்காற்று
யானையின் துதிக்கையிலிருந்து கொட்டிய குட்டிமழையில்
நனைந்திருக்கிறது

- அதிரூபன்

No comments:

Post a Comment