பெரும்பசியினூடே ஒரு மாமிச நிர்வாணம்
- - - - - - - - - -
யூகலிப்டஸ் மரங்களின்
சருகு குலைத்த புதைமேட்டினுள்ளே
நீள்விழிகளுடைய நிர்வாணப்பெண் ஒருத்தி
யுகாந்திர உறக்கத்தினுள் நுழைந்திருக்கிறாள்
வனம் அதிரும்
ஒருப்பெருங்கனவொன்றில்
பைத்தியக்காரனொருவனின்
இறைப்பைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது
ஆதிய நாட்களுக்கான பெரும்பசி
கனவொன்றில் நுழைந்திருக்கிற
பித்துப்பிடித்தவனின் ஆதியபசி
வனத்தின் எல்லா உயிரையும் விழுங்கிவிடும் அளவுக்கு
சிறுகுடல் நிறம்பிய பெரும்பசி
குடல்கிழியும் பசியுடையவனின்
ஒரு போதைக்கிறக்கம்,
சிறுகுடலை இழுத்து
முள்பழத்தின் தீஞ்சுவை பருக,
அதிர்ந்துபோய் நிர்க்கிறது
கனவொன்றில் வந்த வைலட்நிற வனம்
பசியுடையவனின் கருநீளநாக்கு
மாமிச உடலின் குருதிவாடை தேடி
பைக்கால்ஏரிக்கு பின்னே இருக்கிற அடர்வனத்தினுள்
ஓநாய்குலத்தின் படுக்கைக்குள் நுழைகிறது
ஒரு கிழட்டு ஓநாயின் நாசியில்
மனிதவாசத்தின் தீட்டு இறங்க,
சருகு மிதிபட்டு நொருங்கும் வனத்தினுள்
பீலைவிழிகளின் அகட்டுப்பார்வை விரிகிறது
கிழட்டு ஓநாயின் கண்நரம்பொன்றின் உயிர்
தன்னினம்இல்லாத இரண்டுகால் ஜீவனொன்றை
வனத்தினூடே கண்டு,
மௌனவேகத்தில் தலையை கவ்வ
தரையிலிருந்து தலைதூக்குகிறது
பைத்தியக்காரனின் ஆதியப்பசியை
மாமிசப்பிராணி பற்களோடு தாவுகையில்,
யூகலிப்டஸ் மரங்களினூடே துயில்ந்தவள்
ஒரு பெருமூச்சின் சீற்றத்தோடு
சருகுகளை சிதறவிட்டு விழித்து பார்க்கிறாள்
அவள் நிர்வாணத்திற்கெதிரே
ஒரு யூகலிப்டஸ் காடும்
ஒரு அரையுடை பைத்தியக்காரனும்
பெரும்பசியுடனே நின்றுகொண்டிருக்கிறார்கள் ...
- அதிரூபன்.
No comments:
Post a Comment