Showing posts with label வலசை இதழின் கவிதைகள் குறித்தான விமர்சனம். Show all posts
Showing posts with label வலசை இதழின் கவிதைகள் குறித்தான விமர்சனம். Show all posts

Wednesday, 24 February 2016

இளைப்பாறுதலுக்கு இடையில் கவிதைகள்

சிறகுகள் உதிர்த்தக் கவிதைகள்

- - - - - - - - - - -

கலை,இலக்கியம் எல்லாம் நாம் விரும்பி வாழ்கிற வாழ்க்கையைவிட மேலானது, என்கிற ஆதிரையின் வரிகளில் தற்கணம் அமர்ந்துபார்க்கிறேன்.

புலன்வெளி உட்புகுகிற எல்லாம் கலை தீண்டிவந்த காற்றின் வாசம்தான்.

நாம் கண்டுபிடித்த ஒன்றை, ஒன்றின் உண்மையை, அதன்மீது வரைந்த  கற்பனையை, அகவெளிப் பார்வையில் பயணப்படுத்தியிருக்கிற நம்வெளியை, ஒரு காகிதமனமாக மாற்றி அமைக்க மெனக்கடும் போதுதான் எழுத்தின்வெளி திறக்கிறது.

மன அதிர்வுக்குள் நாம் உணரக்கூடிய மாயகணத்தின் பிம்பங்கள், தனக்கு புலப்படாத ஒன்றோடு ரகசியம் பேசி வளர்கிறது.

இந்தப்புலப்படாத ஒன்றின் உணர்வு, மொழியில் பிரவேசிக்கும்போது எழுத்து உதிர்கிறது.

ஒரு காட்சியை அப்பட்டமாக எழுத்தாக்க முயலும்போது, எழுத்து ஒன்றை அனுபவிக்கிறது.
அந்த எழுத்தின் அனுபவம் தான் படைப்பாளியின் பார்வையில் வடிவமாக வெளிவருகிறது.

ஜூமானா ஹடாட் என்கிற லெபனான் பெண் கவிஞர்.
இவரது கவிதையொன்றை தமிழில் ந.ஜயபாஸ்கரன் " பிணம் " என்னும் தலைப்பில் மொழிபெய்த்திருக்கிறார்.

என்னுடைய சடலத்தை உற்றுப்பார்க்கிறேன்
எனக்கு நானே அழகாக இருப்பதாகவும் உணர்கிறேன்
  - என்று தொடங்குகிற இந்தக்கவிதை அதன் வெறுமையின் பிடியில் நின்றுகொண்டு பேசுகிறது.

தான் அல்லாது தனக்குச் சம்பந்தப்பட்ட தன் உடலின் ஊர்வலத்தை அழகென பார்க்கிறது

எனது பிரேதம் ஒரு கம்பி
எனது ஈமச்சடங்கில் ஒரு நடனம் இருக்கும்
ஒவ்வொரு வாய்க்கும் ஒரு வார்த்தை இருக்கும்

அகாலத்தின் வெளியிலிருந்து பார்க்கிற, உயிர்கூடொன்றின் கடைசிய ஊர்வலத்தின் நாக்குகளை, ஜூமானா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

அவரில்லாது போன அவருக்குச் சம்பந்தப்பட்ட அந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிற, ஐம்புலன்களின் தேடல்தான் இந்தக்கவிதை.

" அன்னையின் வயிறு போன்ற குன்றில்
அவர்கள் கருணையின்றி ஏற அல்லது இறங்க வேண்டியிருக்கும் "

இந்த வரிதான் அந்தப் பிணத்துக்காரியின் ஆன்மா உணர்ந்த அசல் நினைவு.
கவிதைக்கு உள்ளும் கவிதைக்கு வெளியிலும் ஆன்மா வந்து செல்கிற பாதையை இந்த எழுத்து தீர்மானித்திற்கிறது.

கவிதைக்குள், வரிகளின் இருப்பிடம் இதுதான்.
இந்த வரிகளாலே படைப்பாளி பேசப்படுகிறான்.

மொழிபெயர்ப்பின் வீரியம் கவிதை மீது படர்ந்து, வாசகமனதை பிய்த்தெரிகிறது.

தேன்மொழி தாஸ் எழுதிய "காட்டோடு உலாவுதல்"

நவீன மனதில் மொழியின் வேரூன்றி படர்ந்து, கற்பனையின்  கைபிடித்து வளரும் பெருங்காடொன்றில் " கவிதையின் தேடலை " கவிதையால் உணருகிற ஒரு மாயகண எழுத்துதான் இந்தக்கவிதையின் அடர்த்தி.

" ஆலி மழை பெய்யும் தூவானக்காடு "
- கவிதையின் ஆரம்ப வரிகளுக்குள்ளே மனம் நின்றுகொண்டிருக்கிறது.

உறைந்த மழையின் பண்டகச்சாலை
மழைக்காட்டில் பேசும் மரம்
இலையும் கிளையும் வேர்களுமின்றி மழைக்காட்டில் பவளநிறத்தில் பூத்துக்கிடக்கும் உலகின் மிகப்பெரிய அதிசயப் பூவின் பெயர்.

இந்த மாதிரியான வரிகளுக்களினாலே கவிதைக்குள் ஆன்மா வாழ்ந்துகொண்டிருக்கிறது.

ஒருப்பெருங்காடு வழி காதலோடு ஒளிந்திருப்பவனை கவிதைக்குள் தேடி, காட்டோடு உலவுகிற கொண்டாட்டம் தான் படைப்பாளியின் கவிதைப்போக்கு.

இதுவரையிலும் மொழிமேல் ஏறாத வரிகளின் வீரியம்தான், இந்த எழுத்திலும் தெரிகிறது.
மொழிக்குள்ளே உருவாகிக் கொண்டிருக்கிற தேன்மொழி தாஸ் க்கு என் பிரியங்கள் .

"மருதாணிக் காடுகளின் உன்மத்தம்" சுஜாதா செல்வராஜ் அவர்களின் கவிதைத் தாண்டவம் இதுதான்.

ஆதிக் கனவுகளை திருத்தி எழுதிக்கொண்ட முனை மழுங்கியப் பேனாக்கள்.

ஆதிக்கனவு என்கிற வார்த்தைக்குள் மறைந்திருக்கிற நேற்றைய நாளின் ரகசியம் தேடி செவி நீட்டுகின்றன என் புலன்கள்.

வவ்வால்களின் இரைச்சல் அற்ற
நீண்ட மிகுந்த இரவும்
முதல் தாயின் மார் பற்றி வளரும் பகல்களும்
- இந்த எழுத்து எல்லா வாசகனும் கொண்டாடக்கூடிய ஒன்று.

படைப்பால் பயனுறுகிற வாசகமனம் , படைப்பாளியின் எழுத்துத் தழுவலோடு பயணிப்பதென்பது, இந்த மாதிரியான வரிகளால் அவர்கள் கொண்டாட்டத்தை உணரும் போதுதான்.

மருதாணிக்காடு, உன்மத்த வாசனை
- இந்த வார்த்தைகளெல்லாம் கவிஞனை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

குற்றேவல் சதிரின் 64விதிகள், இளஞ்சேரல் அண்ணாவின் கவிதை.

உலகம் சார்ந்து பேசுகிற, இந்த பிரபஞ்சத்தோடு இயங்குகிற கவிதை வரிகள்.

"" தோல்வியை ஒப்புக்கொண்டு
   ஆட்டத்தை பாதியில் முடித்துக்கொள்கிற தேசங்களால்
   பல சிப்பாய்களும் பொதுமக்களும் காப்பாற்றப்படுகின்றனர் ""

கவிதையிலிருந்து இந்த வரிகளை மட்டும் எடுத்து, எல்லா மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்து, உலகம் வியந்துபார்க்கக்கூடிய ஒரு உண்மையின் வீரியம் நிறைந்திருக்கிறது.

காட்சியும் சூழலும் கணமும் தீர்மானிக்கிற கவிதைகளைத்தாண்டி, மானுட இயல்பை பேசிகிற மொழிதான் 'இளஞ்சேரல்' .

இளஞ்சேரல், இயல்பாகவே அவருக்குள்  ஒரு உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் இயங்கக்கூடிய எழுத்துமனம் தான் இளஞ்சேரலை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மாநூடம் சார்ந்து பேசுகிற இயல்பான மனசு, சமகாலத்திற்கு தேவையான எழுத்து வழக்கு,
முடிந்த அளவில் தனக்குத்தானே நேர்மையாய் இருக்கிற இளஞ்சேரலுக்கு என் அடர்பிரியங்கள்.

முகமது காக்கி கவிதைகளில் ஒன்று வண்ணத்துப்பூச்சி துயில் . ந.ஜயபாஸ்கரன் மொழிபெயர்த்தது. உலகின் எல்லாக் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் ஒரு சிறு ஒற்றுமை இருக்கிறது.
ஈராக்கில் வாழ்ந்த ஒரு கவிஞரால் எழுதப்பட்ட நேற்றைய காலத்து சிந்தனைகள், சமகாலத்தில் சக படைப்பாளர்களிடம் தெரிகிறது.

" வண்ணத்துப்பூச்சிகளே
மென்மையாக சிறகடியுங்கள் "
- இந்தமாதிரியெல்லாம் பேசித்திரிய கவிஞர்களால் தான் முடிகிறது.

மொழிபெயர்ப்பில் இருந்து மொழி பிசகாமல் நம்மொழி பேசுகிற இந்தக் கவிதைகளின் அழகே, இதை தமிழில் கொண்டுவந்த ஜயபாஸ்கரனின் வீரியம் தான்.

" என் மகளின் விழிகளில் துயில்கிற
அரேபிய மான்களை திடுக்கிடச் செய்து விடுவீர்கள் "

விழிகளுக்குள் வேறுஉயிர் துயில்கிறதன் ரகசியம் பேசிவளர்கிற கவிதை, கனவு என்ற ஒன்றை மறக்கடித்ததன் பொருள், இந்தவரியை அழகுபிசகாமல் எழுதித்தீர்த்த கவிஞனின் விரல்கள் தான் ஒரு குழந்தையின் கனவில் கிச்சுக்கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறது.

நவீனம் சார்ந்த எழுத்து, நவீனம் சார்ந்த கவிதை, நவீனத்தின் பெயர்ப்புகளில் சிதறிய இதழ் துண்டுகள், எல்லாமே இங்கு புதிதுதான்.

நவீனத்தனமான வாழ்வு, நவீனத்தனமான சூழல், நவீனத்தின் சாயலில் உயிர்கள், நவீனத்தில் வாயில் உறைந்துபோய் கிடக்கிற மொழியின் நுரைகள், கவிதையினாலும் பேச்சினாலும் சமகாலத்தை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி வருகிற மொழிநடைகள், வாழ்தலெனும் இயல்புக்குள் நவீனத்தின் நாவுகள் வளர்ந்து கிடக்கிற வளர்ச்சிகள், எல்லாமே மானுடப்பார்வையிலிருந்து மனிதப்புத்திக்குள்ளிருந்து, வேறு ஒன்றின் இருப்பை அடையவிரும்புகிற சாதாரண உயிர்களின் நிகழ்காலச் சூன்யம் தான்.

வலசை இதழின் படைப்புகள் எல்லாக்காலத்தின் வளர்ச்சியைப் பற்றியும் சிந்திக்கிறபோக்கு நிறைந்தது.

மஜித் நஃபிஸி எழுதிய ஒரு கவிதையின் கடைசி வரிகள் " தண்ணீர் விற்பவர்கள் சந்துக்களில் கூவிச்செல்கின்றனர்
புத்தம்புதிய இரத்தம்.!புத்தம் புதிய இரத்தம்.!

இன்னும் நூறுஆண்டுகள் கடந்தும்,நாளைய சமகாலத்தில் பேசித்திரிகிற உண்மைதான் இந்தக்கவிதை.

எல்லா காலத்துக்கும் உறியவன் தான் கவிஞன். அவன் தனதாக்கி கொள்கிற எழுத்தின் பெயர்ப்புகளில் நாளைய நிஜம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

படைப்பாளிகளை அடையாளம் காட்டுகிற , அவனின் மனப்போக்குகளில் வாசகமனம் கவர்ந்துசெல்ல, அகத்தின் தூய்மையை பிரதிபலிக்கிற வலசை இதழுக்கும் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்..

- அதிரூபன்