ஆதித்தன்மையின் குடில்
- - - - - - - - - - -
மறக்க நினைக்கிற கணங்களின்மீது தூரிகை வரைந்து செல்கிறான் பூபாலன். வண்ணங்கள் சிதறிய பெருவெளியிலிருந்து தனக்கான கணத்தை கவிதையாக்கி மகிழ்கிறான். ஆதிக்குறிப்புகள் மீது படிந்த புதியபார்வை தற்கணத்தின் சாயலை எழுதச்சொல்கிறது. தன் கண்ணீரை அதிஉண்ணத இசைக்கருவியென வாசித்துக்கொண்டிருக்கிறவனின் இரவு தான் பூபாலனின் கவிதை. தான் பயணிக்கிற வெளியிலிருந்து கணம்ஊறி மனம் தேக்கிவைத்த ஆசைகளின் மீதும், புலன்விரும்புகிற காட்சிகளில் மீட்கமுடியாத ரகசியத்தின் மீதுமே தன் தனிமையை செலவழிக்கிறான்.
பிரபஞ்சத்தின் முகத்தை யூகிக்கநினைக்கிறவனின் மனம், இப்போது அழிந்த சாம்பல்கின்னத்தில் நிறைந்துகிடக்கிறது. உலகத்திற்கே ஒருமுகம் அது ஆதிமுகம். இந்தமுகத்தின் பிரதிகள் தான் அன்புசெழுத்துபவையும் எறித்து புதைப்பவையும்.
தன்நிலையை கவிதையாக்குகிற போதும் பிறவலியை மையப்படுத்தும்போதும் தன் ஆதிமுகத்தின் மீது படர்ந்திருந்த பெருங்காலத்தை தடவிப்பார்க்கிறான் பூபாலன்.
சிநேகிக்கிற மனம் இவனுக்குள் எப்பொழுதுமாய் இருக்கிறது. உடைந்து சிதறிய சோப்புகுமிழ்களால் புன்னகையைத் தொலைத்தேன் என சொல்லும்போது இவன் மனம் நமக்கு புலப்படுகிறது. மனதின் தேடலுக்குள் நிறைந்திருக்கிற அகப்பார்வை இவனை கவிதை எழுதவைத்திருக்கிறது. உயிர் பேசநினைக்கிற புதிதில் தன் குழந்தைமுகத்தை நிறுத்தியிருக்கிறான். இவனால் ஆன பிரபஞ்சம் குழந்தைகளால் ஆனது. இவன் கவிதைகளில் திரியும் குழந்தைகள் வானவில்லானவை. அவைகளின் காதுகளில் பிங்க் நிறத்தின் ரகசியம் சொல்லி மறைகிறவனின் தடங்கள் தான் பூபாலனின் கவிதை.
கவிதைகளுக்குள் அலைகிற வண்ணங்கள் ப்ரத்யேகமானவை. அவைகள் பிறக்கிற தருணங்களில் தூரிகைசூட்டில் நனையவிரும்புகிற மனம்தான் வாசக எண்ணம்.
அமுங்கிய அடிவயிற்றை அவள் தடவிக் கொண்டிருக்கும் நேரம்....... இந்தவரி எதனால் ஆனது. மனம் பேச மறுக்கிறது. உயிர் உறைந்த இடத்திலிருந்து தேடுகிறேன். ஆழ்மனவீரியமிக்க ஜீவிகள் சிகரைட் சாம்பலில் கரைக்க நினைக்கிற தருணமென சொல்கிறான் பூபாலன்.
காலகாலமாய் பெண்களுக்கு நடந்துவரும் இழிச்செயல்கள். எழுதிப் பயன்படாத பக்கத்தில் அழுகையை மட்டுமே நிரப்பமுடிகிறது. மனிதமிருகங்களின் தடங்கள் காமம் பிடித்தவை. எதிர்பாலினத்தை பறிக்க நினைக்கிற மனிதச்செயல், இழிந்தவினைக்குள் நுழையச்சொல்லுகிற மனிதமனம் எவ்வளவு கலவரமானது..
"" உயிரும் உடலும் சேர்ந்து வழங்கியும்
உயிரை வெறுத்து உடலை விரும்புகிற ஆண்களின் இழிந்த வினை " ( க.வை. பழனிச்சாமியின் மீண்டும் ஆதியாகி நாவலின் ஒரு வரி இது )
- எவ்வளவு உண்மை நிறைந்தது இது.
உரக்க பேசுகிற என்போன்ற குரல்களால் பிரபஞ்சத்தின் காதுகள் செவிடாகின்றது.
மனிதமொழி பேசுகிற நாக்கைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன், எனக்குள்ளும் என்வெளியிலும்.
பூபாலின் கவிதைகள் குழந்தைகளுக்கான முகம் கடவுளுக்கான அகம் மிருகங்களுக்கான அகம்புறம் நிறைந்தவை. கவிதைக்குள் தொலைந்துவிடுகிற சௌகர்யம் எனக்கு பிடித்தவையே அண்ணா....
- அதிரூபன்.
ஆதிமுகத்தின் காலப்பிரதி
ஆசிரியர் இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கியவட்டம் வெளியீடு
விலை.70
No comments:
Post a Comment