வயிற்றில் உதிக்கும் சூரியன்
- - - - - - - -
கடல்நீர் சுவைக்கிற நாக்கில்
தாகம் ஊறக்கண்டேன்
சூடு மேல் பூசுகிறது
நிர்வாணமாக்குகிறது வெயில்
மணல்குகைக்குள் புதைந்திட எழும் எண்ணத்தை
இந்த ஆதி நிர்ணயித்திருக்கிறது
நிலம் நீராகி தடங்கள் மூழ்கிய ஆழத்தில்
உடலை அமிழ்த்த நினைக்கிறேன்
கண்களின் குளிரை
பூமியில் இறக்கி
அதன் இருளில் கொஞ்சமாய் வாழவேண்டும்
கள்ளிச்செடியின் காய்கள்
சிறுகுடலின் பாதியிலும் நிரம்பவில்லை
பசிக்கிறது
வெயிலை குடித்து ஒழுகுகிற வியர்வை
பாலையின் ஒளியில் ஊற்றாகிறது
சிறுநீர் நனைத்த மணலை அள்ளி
என் உடலில் நீர்த்திருக்கிற சூரியன்மேல் பூசுகிறேன்
கடலில் மூழ்குகிற சூரியனுக்கு இந்தகுளிர் போதாமை தான்
கைகளை கால்களுக்கிடையில் கிடத்தி
முழங்கால் தலைதொடும் நிலையில்
சுருண்டு படுத்துக்கிடக்கிறேன்
ஒரு மிருகத்தின் நிழல்
வெயிலை மறைத்து அருகில் நிற்கிறது
என் வயிறின் பள்ளத்தில் விழுந்த சூரியனை
கொஞ்சமாய் கொஞ்சமாய் குருதியொழுக புசிக்கிறது
என் அருகாமை மிருகம் ...
- அதிரூபன்
No comments:
Post a Comment