ஆகாசம் அருந்தி வாழும் நிலம்
- - - - - - - -
காட்டின் வயதை பேசும் அடிமரம்
இலைவிரிப்பில் முகம் பார்க்கும் ஆகாய தேகம்
வனமெங்கிலும் அகம் நிருவும் உயிர்கள்
வாழ்வின் காரணத்தை மீட்டுகின்றன
இருளேறாத நிலவின் கண்களில்
ஒரு காடு பிறக்கிறதென கொள்வோம்
இறகு கூடொன்றில் குளிர் பூசுகிற நிலவு
பறவையின் பிரசவத்தில் பாதிவலியை சுகந்தமாக்குகிறது
வயிற்பெருத்து கர்பத்தோடு அமர்கிற தட்டான் தோகைகள்
தனிமையை மருத்துவத்திற்கு செலவாக்கும்
யானையின் காதுகள்
தடித்த மரத்தின் நிழலை விசுறுகின்றன
நிழலொதுங்கி வெய்யில் காய்ந்த நிலத்தில்
யுகாந்திரத்தை மேய்கிறதொரு துதிக்கை
முறிந்த மரத்தின் பட்டைகளில்
குடையென விரிகிறது காளான்பிஞ்சுகள்
இறந்த மரத்தின் உயிர்குடித்து வளர்கின்றன
குடைகாளான்கள்
காட்டில் பிறந்த பறவைகள்
மனதசப்தத்தில் பறந்து செல்கின்றன
தனிமையின் நிழலில் அமர்ந்து
மலைமுகம் காண்கிற விழிகள்
காட்டின் பூரணத்தில் அமிழ்ந்து சாவட்டும்
- அதிரூபன்
No comments:
Post a Comment