மரணத்தை புசித்து
- - - - - - - - - -
தானிய நிலங்களில்
ஈரம் வற்றிப்போயிருந்தன
பசியின் வயிறுகளில் விழுந்த பள்ளங்களில்
சூரியன் உதித்தெரிக்கிறது
தாகத்தின் நரம்புகளை துளையிட்ட கதிர்கள்
மரணத்தின் மேனியை படுக்கையாக்கின
இறையை நம்பியிருக்கிற உயிர்கள்
அறுவடைகாலங்களில் பிணங்களை நடுகின்றது
இளவெயிலின் தாகம்
ஆறாமறிவுக்கடலை உறிஞ்சி
நெருப்பை உமிழ்கிறது
உயிர் கேட்கிற உணவு
இந்த நிலத்தின்
மனிதக்கழிவோடு அழிந்துபோனது
இறையான்மையின் கருணை
பிறந்த குழந்தையின் பட்டினிச்சாவைப்போல்
குப்பையில் கிடக்கிறது
உங்கள் நம்பிக்கைகள்
மழைநேர விண்மீனைப்போல
எப்போதாவது,
வானத்திலிருந்து
விழுகிற உணவுப்பொட்டலங்களில்
விஷம் இல்லையென்று நம்பிக்கை வைத்திருங்கள்
உங்கள் நிர்வாணங்களை
மாறிமாறி புசித்து நிரம்பிய வயிறுகளை
பசிக்கு பழக்கவேண்டாம்
நம்மைபோன்றவருக்கு
மரணம் பழக்கப்பட்ட ஒன்று ....
- அதிரூபன்