காட்டுத்தோழியின் பார்வையில்
- - - - - - - - - -
மௌனம் புதைத்து எழுந்த
அடர்வனத்தின் வாசம் நீ
ஒரு மழையின் தெரிப்பில் பேசந்தொடங்குகிறாய்
எனக்குள்ளான உன்வரவை
காட்டில் தொலைந்துபோனவளின் பாதை என்கிறாய்
நீ அறியாத ஒரு வாசத்திற்கு
என்பெயர் வைத்திருப்பதாய் சொல்கிறாய்
ஒரு முயல்குட்டியின் முள்ளங்கிச்சுவைபோல் தான்
என் பேச்சின் வாசமும் என்கிற உன்னால்,
பொருள் தெரியாத பொய் அறிந்து மகிழ்கிறேன்
எனக்காக ஒரு இலையை பத்தரபடுத்தியிருக்கிற
உன் புத்தகங்களுக்கு மத்தியில்
உறங்கிப்போவதாய் உணர்கிறேன்
ஒரு நதியின் ஓட்டத்தில்
ஒன்றிக்கொண்டிருக்கிறது இருவரின் பிம்பம்,
நாம் இணைந்த நீரில்
பல முள்ளில்லாத மீன்குஞ்சுகள்
நீந்திப்போவதன் ரகசியத்தை
என் செவிமடலுக்கருகில் கிசுகிசுக்கிறாய்
இந்த மீன்குஞ்சுகளின் குரல்வளைக்குள்
நம் பாத அழுக்குகள் ஒன்றுசேர்வது
என் ஆசைக்குள் நீ மூழ்கிவிட்டதாய் எண்ணுகிறேன்
மரக்குகையொன்றில்
கிளி மறைத்துவைத்திருந்த
கொய்யாப்பிஞ்சினை
எனக்காக திருடி வந்து நீட்டுகிறாய்
என் காட்டுவழிகளில்
உன் பாதவடிவத்தில்
புலியொன்று திரிகிறது என்கிற உன்பேச்சை,
நம்பித்தான் ஆகவேண்டும்
இந்தப் பெருங்காட்டை
ஒரு விதைக்குள் திணித்து
மென்று கொண்டிருக்கிறேன்,
உன்னை மட்டுமே சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
என்கிற உன் வனக்குரலைத்தான்,
நான் காதலிக்க விரும்புகிறேன் ..
- அதிரூபன்.
No comments:
Post a Comment