Saturday, 26 December 2015

வெய்யில் தேசம்

அது ஒரு வெய்யில் தேசம்

நிறங்களின் ஊடே
சலனங்களை ஏற்படுத்திச்செல்லும்
அரூபத்தின் நிழலில்
நான் அமர்ந்திருக்கிறேன்

தாகத்தின் கடைசிய வாய்
ஒரு சொட்டுத்துளியை
என் குருதிக்குள் உறைத்துவைத்திருக்க,
பேரண்டம் விரும்பிய தாகமொன்று
என்னை விழுங்கியபடி
காய்ந்துகிடக்கிறது

பிரபஞ்சம் விரும்பும் பூரணதேசம்
இந்த வெய்யிலின் கையில்
தவழ்ந்து கொண்டிருக்க,
ஆதவனின் உதடுகள்
முத்தத்தை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது

மாமழையின் குட்டிகள்
வெய்யிலில் பூத்த வியர்வை கொப்பலங்களாய்,
தேகத்தின் மேலேறி உறங்கிக்கொண்டிருக்கிறது

பகலொன்றின் சிரிப்பில்
ஒன்றிரண்டு சூரியன்
கள்ளிஇலைகளையும்
சாம்பலாக்கி மகிழ்கின்றன

ஒரு வெய்யிலின் முத்தம்
என் நிழல்தொட்டு ஜூவன் செய்தால்,
இந்த பிரபஞ்சம்
அதற்கான ஆடையை உடுத்திவிடும் ..

No comments:

Post a Comment