நீளிரவிற்கு லாவகமான இசை
ஒரு நரியின் ஊலையின் ஓலமாக
வனத்தின் இருட்டு கிழித்து
இந்த வெள்ளை ராத்திரியின் முச்சந்தியை
தொற்றுப்போகிறது
கதவுகளுக்கு வெளியே தள்ளப்பட்ட
குடிகார கணவனின் நிலையை,
ஆறுவயது மகள்
விழித்திருந்தே காட்சியமைக்கிறாள்
இருளின் சாயலொரு நிழலொன்று
கோயில்வீதியின் பாதை தடங்களில்
உலாவுகிறச்செய்தி,
கௌரி அக்காவின் கனவில்
ஏதோவொன்றை உலறிவிட்டுப்போகிறது
நிலவுக்கும் நட்சத்திரத்திற்குமான இடைவெளி
மயாணத்திற்கும் மந்தைவீடுகளுக்குமான இடைவெளியோடு
ஒப்ப இருக்கிறது
ரயிலில் தற்கொலை செய்துக்கொண்ட
அமுதா அக்காவின் நினைவு,
பட்டணத்திலிருந்து
கிராமம் வந்துகொண்டிருக்கிற
வேறொரு ரயிலோடு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது
பனியில் வேர்த்திருக்கும்
எல்லை சாமியாரின் அரிவாளில்,
எப்போதோ இரவு முத்தமிட்டிருக்கிறது
மலையின் மேலே எறிந்துகொண்டிருக்கிற
அந்த ராடச்சஷ நெருப்பு,
ஒரு கடவுளின் கோபத்தை
பற்றவைத்திருக்கிறது
இரவுகளோடு விழித்திருக்கிற
இந்த பெரும்அமைதி,
இருளின் மடியிலே
உறங்கிக்கொண்டிருக்கிறது
இரவு இரவாகத்தான் இருக்கிறது.
பகலை கொலைசெய்த பாவத்திற்காகத்தான்
இத்தனை அழகாகவும் இருக்கிறது..
- ச.விவேக்.