யாவும் பிரம்மாண்டத்தை தழுவியபடி
அகத்தின் தூய சாயலில்
ஒரு பரந்த வானத்தைப்போல்
விரிந்துகிடக்கிறது
இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தில்
ஒருவனுக்கான ஜீவிதத்தை
அவன் பிரியப்படுகிற கலையில்
அவனாக்கிக்கொள்கிற ஒன்றை
மாபெரும் எண்ணத்தின் முழுமையால்
மண்டியிட்டுக்கிடக்கிறான்.
இந்த கிடத்தல்
நயப்படுகிற அகத்தின் பேரானந்தத்தை
கொண்டாடும் கணமாக
கலையின் கிளைகளில்
கவிதையென ஓவியமென இசையென சிற்பமென
புலன்விரும்புகிற ஒன்றின் மடியில்
ஊசலாடி மகிழத்தான்.
எழுத்து தருகிற நம்வளர்வை
வேறேதேனும் ஒன்றோடு இணையாக்கமுடியாதென்று
கற்றுக்கொண்ட மனதின்பிடியில்
கவிதையை அமர்த்தி
அதன் உயிரின் மேலேறி
சருகிசருகி விளையாட அல்லது
அது உதிர்த்த இறகுகளை கலைக்க,
கவிதையின் உடம்பை ஏந்திக்கொண்டு
நித்தம் என்னோடு அதை பயணப்படுத்த,
முளைத்தக் கைகளின் விரல்களில்
அதை அடிமைப்படுத்தி ஆனந்தமடைய,
புலனாதிக்கத்தின் பெயர்சொல்லி
கவிதையின் மடிபிடித்து மார்பருகி வாழ,
எனக்குள்ளான என்னோடு இருக்கிற கலைக்கு
உயிர்கொடுத்து அதன் ஜீவிதத்தை உணர
கற்பனைசெய்யப்பட்ட பிரமாண்ட பிரபஞ்சத்தோடே
என்னை வளர்த்துவருகிறேன்.
என்னைச்சார்ந்த உலகம்
என்னை ஏந்தியிருக்கிற பூமியின் மடி
என்னை வாழவிடுகிற பூமியின் வெளி
இவற்றோடு ஒன்றி
கவிதையின் மகத்துவத்தை
சந்தித்த ஆளுமைகளின் முன்நிறுத்தி
என்னை நானே தட்டிக்கொடுத்து,
மாமனித எழுத்துக்களின் பூரண ஆசிவாங்கி
அவற்களின் அகத்தில் திசுவாகினும் நுழைய
வேண்டித்தவிக்கிறது இந்நித்திய ஜீவன்.
இப்பிரபஞ்சம் விரித்த
கலைமடியில்
ஆறாமறிவு உதிர்த்த கவிதையொன்றிற்கு
உயிரையும் உடலையும் தேடி
இனி மறைபொருளாவேன் ..
- ச.விவேக்
No comments:
Post a Comment