Tuesday 16 February 2016

காடு வழி செல்கிற திசை

காடு வழி செல்கிற நடைப்பயணம் அலாதியானது.

நமக்கான நெருக்கத்தை இந்த மரங்களின் காதுகளுக்குள் இறைக்கிற சௌகர்யம், அதுபோலோரு புதிய இயல் எந்த அறிவிலும் படரவில்லைதான்.

ஐம்புலனுக்கும் நெருக்கமான ஒரு தாகத்தை இந்தக்காடு நமக்கு வழங்குகிறது. கண்களுக்கான ரகசியத்தைப் பத்தரப்படுத்திவருகிறது.

வனம், வானம், இசை, கனவு, ஒருபிடிமூச்சு , ஆழ்ந்த தூக்கத்தில் சாவு
இந்த மாதிரியான ஒரு பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரும் லயித்துப்போயிருந்தால், இந்த தேசம் ஒரு மூங்கில் காட்டின் இசைச்சுவையை போல் ரசனை மிகுதியாய் இருந்திருக்கும்.

மீன்களுக்கு முத்தமிடுகிற இருபிஞ்சுஉதடுகளின் ஆசையைப்போலத்தான், நான் வனத்தினுள் வாழநினைக்கிறப் பிரியமும்.

நான் கண்டிடாத ஒரு வனலோகம் எந்தப்பறவையின் எச்சத்தில் விளைந்ததோ...!!

மலைக்காடொன்றின் உச்சியில் மேகத்தை மோதிமோதி விளையாடும் என் கைவிரல்களில், ஒரு மழை அதன் முதல்துளியை இட்டுநிரப்பி, பின் புவிஈர்ப்புக்குள் நுழைகிற ஒரு பிரியம் எத்தனைஎத்தனை வாழ்தலானது...!

இந்தக்காட்டின் எல்லையெங்கும் என் அகப்பார்வையின் ரேகைகள் தான்.
இந்தக்காட்டின் வாசமெல்லாம்
என் புலன்தீண்டிய காற்றின் சுவை தான்.

காடுவிட்டு காடுசெல்ல ஒரு பறவையின் வால் பிடித்து நடப்பதென்பது, எந்த மாதிரியான பைத்தியக்காரத்தனம்..?!
அந்த பைத்தியப்பித்து தானே எனக்கும் வாய்த்திருக்கிறது.

இந்தவனத்தினுள் நான் தேடி அழைகிற என் பிரமிப்பின் லயிப்பு, எந்த மரத்தின் கதைகளை படித்துக்கொண்டு எந்த வானத்தில் பறக்கிறதோ..?

நான் வரைந்த என் கற்பனையின் காட்டில், எந்த மிருகமும் ஆறாம்அறிவை கொன்று சமைக்காது.

என் லென்ஸ்விழிகள்
ஒரு நிர்வாண மரத்தில்,
இரு பறவைகள் பரிமாறிக்கொண்டிருக்கிற காமத்தை விழுங்குகிறது.

இந்த காமத்தின் ஆடையில் எந்தக் கந்தலும் இல்லை.

நிர்வாணத்தின் ரகசியம் பேசுகிறது நான் வாழநினைக்கிற காடு.

புலன்வழி இறங்குகிற காட்டின் ரகசியங்களில் எல்லாம்,
இசை மிதக்கிறது.

இலை முறிவொன்றில் பிறக்கிற சத்தத்தில், காட்டின் உயிர்கள் இசையை உணர்கின்றன.

இசைத்ததும்புகிற ஒரு நிறைகுடக்காடு யானையின் குளியலில் இருந்து ஒவ்வொரு துளியாய் தரை நனைக்குகிறது.

பிசுரு தட்டியக் காட்டின் பாதைகளில் ஒரு குட்டிமுயலின் தடங்கள் தெரிகிறது.
நான்கு விரல்களின் முகங்கள் சருகில்லாத மணல்வெளியில் நம்மை பார்த்து சிரிக்கின்றன.

இந்த வாழ்வு ஒரு வனத்துக்கானது.
இந்த வனம் ஒரு வாழ்வுக்கானது.

பிரபஞ்சப்பெருவெளியில் இருந்து ஒரு வனநிழலில் வாழ்ந்துபார்ப்பதென்பது, என் வாழ்நாள் பூரணம் அல்லவா..

என் பிறப்பின் ரகசியங்களை
வனங்களின் காதுகளுக்குள் இறங்கிப் பேச,
நான் ஆதிமனிதனை தழுவ வேண்டியுள்ளது.

நான் ஆதியின் மிச்சம்.

என் வாழ்வு தரும் ஒரு மகர்ந்தத்தை
காட்டின் வயதோடு ஒப்பிட்டு மகிழ
ஒரு வனப்பிரதேசத்தின் இருட்டில் கரைந்து
இனி நானும் மறைவிடமாவேன்..!!

- அதிரூபன்

No comments:

Post a Comment