Sunday, 7 February 2016

கற்பனை மீதொரு கடல் வரைய

என்னை இயங்கவிடாமல் செய்கிற க.வை.யின் "ஆதிரை"

-----------------

யாவரும் நுழையவிரும்புகிற புரிதல்களுக்குள் தான் ஆதிரை கூட்டிச்செல்கிறது.எத்தனை விதமான கற்பிதங்கள். எந்த மாதிரியான போதனைகள். யாவற்றிலும் வியந்துகிடக்கிறேன் க.வை.ஐயா.

நீங்கள் வாழ்ந்துமுடித்திருக்கிற ஆதிரையின் இல்லத்தில் இப்போதுதான் நுழைந்தவனானேன். இந்த மானுடப்பயலுக்கான வீரியம் ததும்பி நிறைகுடமாகிக்கிடப்பதை உங்களால் அறிந்துகொண்ட தற்கணம் நான் ஏதுமற்றவனாகிறேன்.

உங்கள் மனப்போக்கு அதற்கான வெளியில், தன்னில்லாத தன் மன உருவை எங்கெங்கிலும் பயணிக்க நினைக்கிறது. உங்கள் ஆளுமைத்திறனில் தான் எத்தனை ஆச்சர்யம்!

ஒரு நிகழ்வுக்குள்ளே ஆன்மாவிற்கும் உருகொடுக்கிற உங்கள் கற்பனைத்திறனில், என் அழகியகணங்களை அமர்த்திப்பார்க்கிறேன். பிறந்த குழந்தை பேசுகிற மொழியின் தூய்மை நிறைந்துகிடக்கிறது.

உங்களால் நான் கற்றுக்கொண்ட என்வெளியின் புதியபாதைகளில், பயணங்களுக்கு இனி குறைவில்லை. உங்கள் புரிதல்களும் உள்வாங்கும் திறனும் எப்பொழுதும் எங்களை ஆச்சர்யத்தின் எல்லைவரை அழைத்துச்செல்கிறது.

சாதாரண காட்சிகளை, உங்கள் எழுத்தும் மனமும் ஒன்றி வெளிக்காட்டுகிற ஒரு படிமம், புதியவெளியொன்றை உருவாக்குகிறது.அந்த வெளிதான் யாவரும் வியக்கும் வண்ணம் ஆகிறது.

ஆதிரையிலிருந்து நான்  லயித்துக்கிடக்கிற ஜென்மசாசனங்கள் மூன்று.
" வனம் இசை கனவு "

இந்தமூன்று பிரபஞ்சமும், என்இருப்பை தனதாக்கிக்கொண்டன. அதன் உலகில் நான் எனப்படுகிற ஒரு இயல், கொஞ்சமும் எனக்குத் தோன்றவில்லை. இப்போதெல்லாம் வனத்தின் மீதும் இசையின் மீதும் அதீதக் காதல் கொள்கிறேன். என் நிழல்படாத வனலோகத்தின் வெளி நான் பிறந்துபார்த்ததாய் உணர்கிறேன். என் வனமெங்கும் உங்கள்முகம் தான்.

இந்த எழுத்துக்குமுன், நான் துளிதூசிக்கூட கிடையாது என்பதே உண்மை. எப்போதுமே வாசிக்கநினைக்கிற ஒரு காகிதமனம் இந்த ஆதிரை. நான் என நம்பப்படுகிறது எனக்கும் என்மீது இப்போது நம்பிக்கையே கிடையாது. என்னையும் மறைபொருளாக்கி பார்க்கத் தூண்டிகிறது இந்த ஆதிரை.

"உயிர்களின் சத்தம் சத்தியமாய் இசையே"

நினைக்கநினைக்க செவிகளுக்குள் இறங்குகிற எழுத்தோசையில், உங்களது சிரிப்புச்சத்தம் புலப்படுகிறது. இதற்கு முன் ஒன்றுமே கிடையாது. மானுடச்சத்தி நினைத்து நெகிழ்ந்துகோகிறேன். நான் ஏதும் இல்லாதவனாய் உணர்கிறேன்.

"பறத்தலுக்கு முந்தைய கணத்திலான பறவையின் இருப்பு"

" நான் அவனை நெருக்கமாக உணர்கிறேன். என் வீட்டில் நுழைவது போலவும்,என் சட்டையை அணிவதுபோலான நெருக்கம் "

ஒரு உயிரின் இருப்பை காட்சிப்படுத்துகிற உங்களது எழுத்து வீரியத்தில்தான் , தற்கணம் நான் அமர்ந்திருக்கிறேன். மறை போதிக்கிற ஒரு உணர்வை தீண்டித்தீண்டி திக்குமுக்கடைகிறேன்.

காற்றுக்கும் உருவம் கொடுக்கிற ஒருமனசு தானே உங்கள் எழுத்து. அதை நம்பித்தானே தீரவேண்டும். உங்கள் கற்பிதங்களுக்குள்ளே புலப்படாத காட்சியும் புலப்படுகிற வெளியும் எங்களை நம்பச்சொல்கிற ஒரு மறையுண்மையைத்தானே முதலில் கற்றுக்கொண்டோம்.

"மௌனம் இறுகி அழுகை உறைந்தது"

என்னமாதிரியான வார்த்தைகள் இது!!!
"அழுகை உறைந்தது" இதன் முகத்தை தேடித்தேடி புலப்படாத ஒரு எல்லையில் தனிநிழலாகிப்போனேன். இந்த எழுத்துச் சட்டகத்திற்குள் மனிதப்பூரணத்தைவிட மேலோங்குகிற ஒரு எழுத்துச்சுகம் ஏற்படுத்திய மகிழ்வை, வேறெதுவோடும் ஒப்பிட முடியாது தான்.

நான் நான் நானெனச்சொல்ல இனி ஒரு முடிஅளவுகூட ஒன்றும் கிடையாது. நான், உடல் துறந்ததும் உயிர் திறந்ததும் இந்த ஆதிரையெனும் ஆதிதீண்டலுக்குள் தான்.

என் மனபிம்பத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிற "" ஆதிரையாகிப்போக, க.வை.பழனிச்சாமி என்கிற தனிமனித எழுத்துப்பிரபஞ்சம் எந்தளவிலும் எதற்கும் அதனழகில் நிகராகிப்போகாது .

இன்னும் கோடி நெகிழ்வுகள் உங்கள் வார்த்தைகளுக்குள் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. அது, நட்சத்திரங்கள் போலவும் , மழைத்துளிகள் போலவும் எண்ணமுடியாத அழகாக இருத்தலையே வேண்டுகிறேன்.

"அனுபவம் கலையாகும் ரஸவாதம் கலைஞனின் மறைவிடம்"

இந்த தீர்க்கமான மறைவிடம்தான் உங்கள் இருப்பிடம். கலைஞனுக்கான மறைவிடம் அவன் பெயர்சொல்கிற கலையே. எழுத்துச்சுகம் ஏற்படுத்திய என் சுதந்திரம் எல்லாம்,  உங்கள் எழுத்து ஏற்படுத்துகிற உணர்வின் பிம்பம் தான்.

இனி சொல்வதற்கு ஏதுமில்லை. எந்தகணமும் தலையில் தூக்கிவைத்து வானம்வரைக் கொண்டாட, இந்த எழுத்தில் லயித்துப்போய்விட்டேன் ...

மகிழ்ச்சியும் நன்றியும்

- அதிரூபன்

No comments:

Post a Comment