Monday 23 November 2015

மழையைப்போலத்தான் அவளும்

மழையைப்போலத்தான் அவளும்

அந்தரங்கச்சுகத்தின்
நீர்மையின் குளிரில் வசீகரிக்கப்படுகிற குளிர்மை
இம்மழையின் அனைத்து பொத்தல் இருப்பிலும்
துளிநெழிவை உடுத்தியிருக்கிறது

வெள்ளை மழைக்காக
ஏங்கிய பருவம்,
இப்போது 
மழைக்காதலியின் பெயரோடு
நேற்றைய காலத்தின் இளமையோடு
மழைமழையாய் திரிகிறது
ஒரு பருவப்பெண்னென

கண்ணாடி நிற மழை
ஒரு துளியின் அதிர்வில் உடைந்துபோய்
உடம்பின் பள்ளமேடுகளில்
புரண்டும் ஊறிக்கொண்டும்
தன்நிறப்பொழிவோடு 
குதூகுளிக்க ஆயத்தமாயுள்ளது

சன்னல் விழிகளில்
ஒரு மழைச்சாரலின் கதகதப்பு உரச
ஈரரேகைகளோடு தெளிந்ததேகம்
மழையைப்போர்த்திக்கொள்ள
கைகுட்டையை விரிக்கிறது

பெண்ணென உருமாறிய இம்மாமழை
அதன் ப்ரியராகங்களை,
இருளடர்ந்த இச்செவிட்டு செவியில்
புறாஇறகின் மயிறிலையாய் நுழைகிறது

தேகம்சுடும் இந்த மழைக்குளிர்மை
அவளின் விரல்நிகங்களின் தொடுதலாய்
இப்பேரண்டத்தின் ஆதிமடியை
முத்தமிடுகிறது

எல்லாமொழி பேசும்
இந்த மழையின் வாய்
அழுதும் சிரித்தும் கொண்டிருக்கிற
இம் மாகணம்,
அவள் அவளுக்கான உடையைத்தேடி
மழையை அணிந்துகொண்டாள்

அவள்
கார்காலத்தின் தேவகணப்பட்சி.

இம்மழையின் கந்தலை
கூந்தலில் முடிந்திருக்கிற இவள்,
மழையுமானவள்...

- இலக்கியன் விவேக்

1 comment: