Wednesday 18 November 2015

இசையெனும் இம்சை

மழையின் ப்ரிய ராகமொன்று
எனக்கு பரிட்சயமான குரலை
ஒருத்துளியின் அதிர்வில்
மெல்லிய சப்தத்திற்கினங்க
ஏதோவொன்றின் உயிரை
விழுங்கியபடி கேட்கிறது

செவிப்புலனின் துவாரஇருட்டிற்குள்
பம்மிய வெளிச்சத்தின் அடரில்
மெல்லியலோசை விழுந்து எழ
அதிகொஞ்சமாய் நனைந்திருக்கிறது
இருளில் சிக்கிய இசை

வனாந்திர காட்டின்
இலைஒன்றின் மேல் படரும் இசை
முயல்குட்டியின் கால்தடங்களில்
மூச்சிழைத்து விம்மிக்கொண்டிருக்கிறது

இருட்கதவுகளுக்குள்
அரும்பத் தொடங்கி
இறுக அணைக்கும் ஓசையின் நிறத்தில்
வெக்க ரேகைகளை படியச்செய்திருக்குறது
அணைப்பின்  கதகதப்பு

இலையுதிர்பொழுதில்
கிளைகளிலிருந்து உதிரத்தொடங்கும்
சருகுகளின் முறிவில்
சிணுங்கி சிணுங்கி கீழே குதிக்கிறது
சருகு குலைத்த இசை

கூடுடைத்து உயிர் துயில
கோழிக்குஞ்சுகளின் கண்விழித்தலில்
தாயின் இறக்கைகளூடான வெம்மை தேசத்தில்
பொட்டியினுள் அடைக்கப்பட்டிருக்கிறது
லோகம் தேடி அழையும் இசை

ஆட்டுக்குட்டியின் பசியை
சிறுவனின் மேய்ச்சலொன்றில் நிரப்பி
புற்களுக்குள் நாவிறக்கி லயிக்க
பனியுடலின் வெளியை
மேயத்தொடங்கியிருக்கிறது பசியின் இசை..

- ச.விவேக்

No comments:

Post a Comment