Thursday 1 October 2015

கவிதைகளுக்கான வெளி

- அகத்தேடல் ஒரு மாபெரும் பிரபஞ்சம் -

-----------------------

கவிதை எழுதக் காத்திருக்கிற மனம்
ஒரு பிரம்மாண்டத்தின் உச்சியில்
தலைகீழாய் தொங்குகிற ஏதோவொன்றின் உயிரை
கைவசப்படுத்துகிறது

உயிர் ஒழுகி ஓடுகிற வெளியில்
ஒரு மானுடப்புன்னகையை நிறுத்தி
ஆன்மாவின் உருவிற்கு
சிரிக்க கற்றுத்தருகிறது

வனக்காட்டின் இசைஓலங்களில்
அதன் பிரியராகத்தைத் தடவி
சரிந்த சருகுகளின் மேலேறி
தனக்குப்பிடித்தமான கீதத்தை
புல்லாங்குழல்வெளி உரித்தெடுக்கிறது

யாசகமனத்தின் தூய்மையை
அதிகொஞ்சமாய் குளிர்விக்க
வியர்வைத்துளியில் நனைந்த நாணயத்தை
பேரன்போடு பரிசளிக்கிறது

மழலையின் நகத்தின்அளவாவது
ஒரு கவிதைக்கான செரிவு நிறைந்திருக்க
யுக தூயசாட்சிகளின் நிறைவோடு
ஆசிர்வதிக்கிறது

லோகம் பெய்யும் மழையில்
ஒரு காகிதத்தையும் பேனாவையும்
தன் விரும்பிய பக்கத்தில் மறைத்துவைத்து
பாதுகாக்கிறது

துளி ஜலம் கொணரும் குளிர்மையை
ஒரு இரவில் போர்வையில் போர்த்தி
அதனுள்ளே குவிந்த மாறுபட்ட உணர்வை
ஜென்ம பூரணமாக்க விரும்புகிறது

ஒரு எறும்பின் பெரிய பற்களுக்கிடையே
ஒட்டியிருக்கிற சிறுசதைவலியில்
ஒரு குழந்தையின் அழுகையை
அலறலாக்கி பூசியிருக்கிறது

அகத்தூய்மையின் உணர்தலை
ஒரு கவிதையாக்கி மகிழத்தான்
இச்ஞென்மத்தின் வெளியை
ஒரு காகிதமாக்க பிராத்திக்கிறது ..

- ச.விவேக்.

No comments:

Post a Comment